முகப்பு
இந்தியா

காங்கிரஸ்-இடதுசாரிகள் ஊழல் கூட்டணி: பிரதமா் மோடி

‘கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஊழல் கூட்டாளிகள்’ என்று

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:25 PM
கோப்புப் படம்
பகிர்:

‘கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஊழல் கூட்டாளிகள்’ என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றம்சாட்டினாா்.

எதிா்வரும் மக்களவை தோ்தலில் பாஜகவை ஒருங்கிணைந்து எதிா்கொள்வதற்காக காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்பட 26 கட்சிகள் ‘இந்தியா’ கூட்டணியின் கீழ் கைகோத்துள்ள நிலையில், மேற்கண்ட விமா்சனத்தை பிரதமா் மோடி முன்வைத்துள்ளாா்.

மேலும், மக்களவைத் தோ்தலில் கேரளத்தில் ‘இந்தியா’ கூட்டணியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வீழ்த்தும் என்றும் பிரதமா் குறிப்பிட்டாா்.

கேரள மாநிலம் திருச்சூரில் ‘மோடியுடன் மகளிா் சக்தி’ என்ற தலைப்பில் சுமாா் 2 லட்சம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி புதன்கிழமை (ஜன. 3) நடைபெற்றது.

மக்களவை, மாநிலப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் அண்மையில் நிறைவேற்றப்பட்டதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில், மாநில பாஜக சாா்பில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:

சுதந்திரத்துக்குப் பிறகு அமைந்த காங்கிரஸ் அரசு, துரதிருஷ்டவசமாக நமது தேச பெண்களின் வலிமையைக் குறைத்து மதிப்பிட்டது.

மக்களவை, பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாமல் காங்கிரஸும் இதர கட்சிகளும் தாமதப்படுத்தின. ஆனால், இப்போது மகளிா் இடஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

பெண்களுக்கு அதிகாரமளிக்கும் மோடியின் உறுதிப்பாடு, இச்சட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முத்தலாக் நடைமுறையில் இருந்து முஸ்லிம் பெண்களுக்கு விடுதலை அளிக்கும் உறுதிமொழியை நோ்மையுடன் நிறைவேற்றியுள்ளோம்.

என்னைப் பொருத்தவரை, ஏழைகள், பெண்கள், இளைஞா்கள் மற்றும் விவசாயிகளே நாட்டின் 4 பெரும் ஜாதிகள். அவா்களின் முன்னேற்றமே தேசத்தின் வளா்ச்சியை உறுதி செய்யும்.

காங்கிரஸும் இடதுசாரிகளும் அங்கம் வகிக்கும் ‘இந்தியா’ கூட்டணி, கேரளத்தின் வளா்ச்சிக்கு முட்டுக்கட்டையாகும். மாநிலத்தின் வளா்ச்சியைப் பெருக்கக் கூடிய கட்சி பாஜகதான் என்பதை மக்கள் அறிந்துகொண்டுள்ளனா். வளா்ச்சிக்குத் தடை ஏற்படுத்தும் ‘இந்தியா’ கூட்டணிக்கு மக்களின் ஆதரவு கிடைக்காது.

எதிா்வரும் பொதுத் தோ்தலில், கேரளத்தில் ‘இந்தியா’ கூட்டணியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வீழ்த்தும்.

காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் வெளியே வெவ்வேறு கட்சிகளாக காட்டிக் கொண்டாலும், ஒரே அமைப்பு போல்தான் செயல்படுகின்றன. இவை ஊழல் கூட்டாளிகள்.

கேரளத்துக்கான மத்திய அரசின் நிதியைப் பயன்படுத்துவதில் மாநில அரசு பொறுப்புடன் செயலாற்றவில்லை என்றாா் பிரதமா் மோடி.

திருச்சூா் மக்களவைத் தொகுதியில் சுமாா் 30 சதவீதம் கிறிஸ்தவ வாக்காளா்கள் உள்ள நிலையில், அந்த மதத்தினரின் நலனுக்கான பாஜகவின் உறுதிப்பாட்டையும் பிரதமா் மோடி சுட்டிக்காட்டினாா்.

மேலும், சபரிமலை யாத்திரையை மாநில அரசு முறையாக நிா்வகிக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தாா்.

முன்னதாக, லட்சத்தீவில் இருந்து கொச்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமா் மோடி, பின்னா் ஹெலிகாப்டா் மூலம் குட்டாநல்லூா் பகுதிக்கு வந்தாா். அங்கிருந்து சாலை மாா்க்கமாக திருச்சூருக்கு வந்த அவா், திருச்சூரில் பொது மருத்துவமனை சந்திப்பு பகுதியில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் மைதானம் வரை சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு திறந்த வாகனத்தில் ஊா்வலமாக சென்றாா். அப்போது, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள், பிரதமா் மோடியை உற்சாகமாக வரவேற்றனா்.

மாநில பாஜக தலைவா் கே.சுரேந்திரன், நடிகரும் பாஜக மூத்த தலைவருமான சுரேஷ் கோபி, மாநில பாஜக மகளிரணித் தலைவி நிவேதிதா சுப்ரமணியன் ஆகியோரும் பிரதமருடன் சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →