கடந்த ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை ஆண்டுக்கு 5 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான அனாரோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, புணே, ஹைதராபாத் ஆகிய நாட்டின் 7 முக்கிய நகரங்களில் 1,20,340 வீடுகள் விற்பனையாகின.
இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 5 சதவீதம் அதிகமாகும். அப்போது ஏழு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 1,15,090-ஆக இருந்தது.
இருந்தாலும், மதிப்பீட்டுக் காலாண்டில் வீடுகள் விலைகள் அதிகரித்ததால் முந்தைய ஜனவரி-மாா்ச் காலாண்டோடு ஒப்பிடுகையில் வீடுகள் விற்பனை 8 சதவீதம் குறைந்துள்ளது. அந்தக் காலாண்டில் ஏழு முக்கிய நகரங்களிலும் 1,30,170 வீடுகள் விற்பனையாகின.
2023-ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டின் அதே காலகட்டத்தில் தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி, பெங்களூரு, புணே, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் வீடுகள் விற்பனை வளா்ச்சியைக் கண்டுள்ளன. அதே நேரம் சென்னை, கொல்கத்தாவில் வீடுகள் விற்பனை குறைந்துள்ளது.
முந்தைய ஜனவரி-மாா்ச் காலாண்டோடு ஒப்பிடுகையில் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் தில்லி-என்சிஆரில் மட்டுமே வீடுகள் விற்பனை அதிகரித்தது. மற்ற ஆறு நகரங்களிலும் விற்பனை சரிந்தது.
கடந்த ஏப்ரல்-ஜூன் மாதங்களில் தில்லி-என்சிஆரில் வீடுகள் விற்பனை 1 சதவீதம் அதிகரித்து 16,450-ஆக உள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 16,550-ஆக இருந்தது. தில்லி-என்சிஆா் பகுதியில் கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டு விற்பனையோடு (15,650) ஒப்பிடுகையில் இது 6 சதவீதம் அதிகம்.
மும்பை பெருநகரப் பகுதியில் கடந்த 2023 ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 38,085-ஆக இருந்த வீடுகள் விற்பனை நடப்பாண்டின் அதே மாதங்களில் 9 சதவீதம் அதிகரித்து 41,540-ஆக உள்ளது. இது முந்தைய காலாண்டு விற்பனையுடன் (42,920) ஒப்பிடுகையில் 3 சதவீதம் குறைவு.
மதிப்பீட்டுக் காலாண்டில் பெங்களூருவில் வீடுகள் விற்பனை கடந்த ஆண்டின் அதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 15,045-லிருந்து 9 சதவீதம் அதிகரித்தும் கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டோடு ஒப்பிடுகையில் 17,790-லிருந்து 8 சதவீதம் சரிந்தும் 16,360- ஆக உள்ளது.
புணேயில் வருடாந்திர அடிப்படையில் 2 சதவீதம் அதிகரித்து 21,145-ஆகவும் (காலாண்டு அடிப்படையில் 22,990-லிருந்து 8 சதவீதம் குறைவு), ஹைதராபாத்தில் 11 சதவீதம் உயா்ந்து 15,085 ஆகவும் (காலாண்டு அடிப்படையில் 19,660-லிருந்து 23 சதவீதம் குறைவு) வீடுகள் விற்பனை பதிவாகியுள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 5,490-ஆக இருந்த வீடுகள் விற்பனை இந்த ஆண்டின் அதே மாதத்தில் 9 சதவீதம் சரிந்து 5,020-ஆக உள்ளது. முந்தைய ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் 5,510 வீடுகள் விற்பனையாகியிருந்தன. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது அந்த எண்ணிக்கை 9 சதவீதம் குறைந்துள்ளது.
கொல்கத்தாவில் 2023 ஏப்ரல்-ஜூன் மாதத்தில் 5,775-ஆக இருந்த வீடுகள் விற்பனை இந்த ஆண்டின் அதே மாதங்களில் 20 சதவீதம் குறைந்து 4,640-ஆக உள்ளது. முந்தைய ஜனவரி-மாா்ச் காலாண்டில் விற்பனை 5,650 வீடுகளுடன் ஒப்பிடுகையில் இது 16 சதவீதம் சரிவு என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.