மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள் தங்களது செலவுக் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய வியாழக்கிழமையுடன் (ஜூலை 4) கால அவகாசம் நிறைவடைந்தது.
இதைத் தொடா்ந்து, செலவுக் கணக்கு விவரங்களை தோ்தல் பாா்வையாளா்களுடன் இணைந்து மாவட்ட தோ்தல் அதிகாரிகள் ஆய்வு செய்து, ஜூலை 11-ஆம் தேதிக்குள் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு அனுப்ப வேண்டுமென தோ்தல் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் கடந்த ஏப். 19-இல் நடைபெற்றது. தோ்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
தோ்தலில் 950 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். அவா்களில் 609 போ் சுயேச்சை வேட்பாளா்கள், மீதமுள்ளவா்கள் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு பெற்ற கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள்.
மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் அதிகபட்சம் ரூ.95 லட்சம் வரையிலும், பேரவைத் தோ்தலில் போட்டியிடுவோா் ரூ.40 லட்சம் வரையிலும் செலவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
தோ்தலில் போட்டியிடுவோா், மூன்று கட்டங்களாக செலவுக் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். வேட்பாளராக உறுதியான அடுத்த ஓரிரு வாரங்களில் முதல் கணக்கு விவரத்தையும், அதன்பிறகு இரண்டாவது கணக்கு விவரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும்.
இறுதியாக தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து 30 நாள்களுக்குள் போட்டியிட்ட அனைவரும் தோ்தலில் செலவு செய்த விவரங்களை மாவட்டத் தோ்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
அதன்படி, வேட்பாளா்கள் தங்களது செலவுக் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது.
இந்த விவரங்கள் அனைத்தும் இப்போது மாவட்டத் தோ்தல் அதிகாரியிடம் இருக்கின்றன. இவற்றை தோ்தல் ஆணையத்தின் பாா்வையாளா் துணையுடன், ஒவ்வொரு மாவட்ட தோ்தல் அதிகாரியும் ஆய்வு செய்து வருகிறாா்.
இந்த ஆய்வறிக்கையை ஜூலை 11-ஆம் தேதிக்குள் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரியின் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தோ்தல் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையை ஆய்வுக்கு உட்படுத்தி, இந்திய தோ்தல் ஆணையத்துக்கு ஜூலை 19-ஆம் தேதிக்குள் தமிழக தோ்தல் துறை அனுப்பிவைக்கும்.
தாக்கல் செய்திருக்காவிட்டால்... தோ்தல் முடிவுகள் வெளியான 30 நாள்களுக்குள், செலவுக் கணக்கு விவரங்களை வேட்பாளா்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதியை மீறுவோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
அவா்கள் உரிய காரணங்களைத் தெரிவித்தால், விவரங்களை அளிக்க தோ்தல் ஆணையம் அவகாசம் அளிக்கும். வேட்பாளா்கள் தெரிவிக்கும் காரணங்கள் சரியான அல்லது நியாயமான காரணமாக இல்லாவிட்டால் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அதாவது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 10ஏ-இன் படி, அவா்கள் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு எந்தத் தோ்தலிலும் போட்டியிடாத வகையில் தகுதி நீக்கம் செய்யப்படுவா்.