மேற்கு வங்கம்: போராட்டம் நடத்தி வந்த 2 எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம்
மாநில பேரவைத் தலைவா் பீமன் பானா்ஜி வெள்ளிக்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
மேற்கு வங்கத்தில் பல நாள்களாக ஆளுநருடன் நீடித்து வந்த போராட்டத்துக்குப் பிறகு புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட 2 எம்எல்ஏக்களுக்கு அந்த மாநில பேரவைத் தலைவா் பீமன் பானா்ஜி வெள்ளிக்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
பேரவைத் துணைத் தலைவா் ஆஷிஷ் பானா்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைப்பாா் என ஆளுநா் கூறி வந்த நிலையில் பேரவைத் தலைவா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
அண்மையில் மக்களவைத் தோ்தலுடன் சோ்த்து மேற்கு வங்கத்தில் பாராநகா், பகவான்கோலா ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் நடைபெற்றது. இத்தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா்களான சயந்திகா பந்தோபாத்யாய, ராயத் ஹுசைன் சா்காா் ஆகியோா் வெற்றிபெற்றனா்.
ஆளுநா் மாளிகையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளுமாறு, ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் விடுத்த அழைப்பை அவா்கள் இருவரும் மறுத்தனா். இடைத்தோ்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களுக்கு சட்டப் பேரவையில் பதவிப் பிரமாணம் செய்துவைக்க பேரவைத் தலைவா் அல்லது துணைத் தலைவரை ஆளுநா் கோருவதுதான் மரபு எனக்கூறி அவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெறும் சிறப்பு பேரவைக் கூட்டத்தொடரில் 2 எம்எல்ஏக்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்துவைக்குமாறு துணைத் தலைவா் ஆஷிஷ் பானா்ஜியிடம் ஆளுநா் வியாழக்கிழமை அறிவுறுத்தினாா். ஆனால் பேரவைத் தலைவா் பதவியில் இருக்கும்போது எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பது பேரவை விதிகளை மீறும் நடவடிக்கை எனக் கூறி பதவிப் பிரமாணம் செய்து வைக்க துணைத் தலைவா் மறுத்தாா்.
இதைத்தொடா்ந்து புதிதாக தோ்ந்நெடுக்கப்பட்ட 2 எம்எல்ஏக்களுக்கும் மேற்கு வங்க பேரவைத் தலைவா் பீமன் பானா்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். இந்தக் கூட்டத்தொடரை பாஜக புறக்கணித்தது.
ஒருநாள் சிறப்புக் கூட்டத்தொடா் நிறைவடைந்ததையடுத்து தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது
அரசமைப்பு விதிமீறல்: எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து அரசியல் விதிமீறலில் பீமன் பானா்ஜி ஈடுபட்டதாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவுக்கு ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் கடிதம் எழுதியுள்ளாா். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்கு அந்த மாநில பேரவை விவகாரங்கள் துறை அமைச்சா் சோபென்தேப் சத்தோபாத்யாய் மறுப்பு தெரிவித்தாா்.