அமைச்சராக பொறுப்பேற்றார் சம்பயி சோரன்!
சம்பயி சோரன் அமைச்சரான இன்று (ஜூலை 8) பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஜார்க்கண்ட் மாநில இடைக்கால முதல்வராக இருந்தவரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவருமான சம்பயி சோரன் அமைச்சரான இன்று (ஜூலை 8) பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஜாா்க்கண்ட் சட்டப்பேரவையில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு மீது திங்கள்கிழமையான இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் தலைமையிலான அமைச்சரவை இன்று பொறுப்பேற்றது.
இடைக்கால முதல்வராக இருந்த சம்பயி சோரன் ஜூலை 3ஆம் தேதி தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். அதனைத் தொடர்ந்து ஜூலை 4ஆம் தேதி கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
இன்று சட்டப்பேரவையில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு மீது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில், வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இடைக்கால முதல்வராக இருந்த சம்பயி சோரன் அமைச்சராக பொறுப்பேற்றார். அவருடன் 10 பேர் அமைச்சர்களாக இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியிலுள்ள ஆளுநர் மாளிகையில், மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
ஜார்க்கண்ட் அமைச்சரவையில் 12 பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜம்தாரா தொகுதி எம்.எல்.ஏ. இர்ஃபான் அன்சாரி, மஹாகாமா எம்.எல்.ஏ. தீபிகா பாண்டே சிங், லாதேஹர் எம்.எல்.ஏ. பைதிநாத் ராம் உள்ளிட்டோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சம்பயி சோரன் தலைமையிலான அமைச்சரவையில் இறுதி நேரத்தில் பைதிநாத் ராம் பெயர் பரிந்துரையிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், இம்முறை அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.