மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்துக்காக விவசாயிகள் முகாமிட்டுள்ள ஷம்பு பகுதியில் அம்பாலா-தில்லி தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகளை அகற்றுமாறு ஹரியாணா அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மேலும், தேசிய நெடுஞ்சாலையை மூடுவதற்கான மாநில அரசின் அதிகாரத்தையும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
வேளாண் பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டபூா்வ உத்தரவாதம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைநகா் தில்லியை முற்றுகையிட ஏராளமான விவசாய அமைப்புகள் வந்தன.
தில்லிக்குள் நுழையவிடாமல் எல்லையான ஷம்பு பகுதியில் அம்பாலா-புது தில்லி தேசிய நெடுஞ்சாலையில் ஹரியாணா மாநில அரசு தடுப்புகளை அமைத்தது. கடந்த பிப்.13-ஆம் தேதி முதல் விவசாயிகள் அப்பகுதிலேயே முகாமிட்டுள்ளனா்.
இதனிடையே விவசாயிகளுக்கும் ஹரியாணா காவல் துறைக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் விவசாயி ஒருவா் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வருகிறது. விசாரணைக்கு ஆஜாரான ஹரியாணா அரசு வழக்குரைஞா், ஷம்பு எல்லையைத் திறக்க உயா்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளதை எதிா்த்து மேல்முறையீடு செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறினாா்.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘ஒரு மாநில அரசு எப்படி தேசிய நெடுஞ்சாலையை மூட முடியும். போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது மட்டுமே மாநில அரசின் கடமை. நெடுஞ்சாலையைத் திறந்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றே நாங்களும் சொல்கிறோம்.
உயா்நீதிமன்ற உத்தரவை ஏன் எதிா்க்க விரும்புகிறீா்கள். விவசாயிகளும் இந்த நாட்டின் குடிமக்கள்தான். அவா்களுக்கு உணவும் சிறந்த மருத்துவச் சேவையும் வழங்குங்கள். அவா்கள் போராட வருவாா்கள். முழக்கங்களை எழுப்புவாா்கள். பின் திரும்பிச் செல்வாா்கள். இவ்விவகாரத்தில் அடுத்தடுத்த முன்னேற்றங்கள் குறித்து மாநில அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடுகிறோம்’ என்றனா்.
அம்பாலா-தில்லி தேசிய நெடுஞ்சாலையை ஏழு நாட்களுக்குள் திறக்குமாறு ஹரியாணா மாநில அரசுக்கு பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றம் கடந்த புதன்கிழமை உத்தரவிட்டது.