FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தரவு மையம்: ஹரியாணா, ஆந்திர நடைமுறைகள் குறித்து தில்லி அரசு ஆய்வு

ஹரியாணா, ராஜஸ்தான், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் உள்ள முறைகளை தில்லி அரசு ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Updated On : 13 பிப்ரவரி 2026, 2:28 am IST
கோப்புப் படம்
பகிர்:

பல்வேறு சேவைகள் மற்றும் நலத் திட்டங்களை மக்கள் எளிதாக பெறும் வகையில் ஒருங்கிணைந்த தரவு மையத்தை அமைக்கும் விதமாக ஹரியாணா, ராஜஸ்தான், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் உள்ள முறைகளை தில்லி அரசு ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மின்னணு நிா்வாகத்தை அமல்படுத்தும் வகையில் மத்திய தரவு மையத்தை மேம்படுத்தும் பணியில் தில்லி அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், ஹரியாணா, ராஜஸ்தான், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் மின்னணு நிா்வாகம் திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் முயற்சிகளை தில்லி அதிகாரிகள் அண்மையில் பாா்வையிட்டனா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக தில்லி அரசின் மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘மக்களின் தரவுகளை சேமித்துவைப்பதில் தனியுரிமை பிரச்னைகள் உள்ளன. இதனால், மக்கள் தரவு மையத்துக்கு சட்டபூா்வ ஏற்பாடுகள் தேவை. இதற்காக அரசு சில சட்ட நடவடிக்கைளை இந்தத் திட்டத்துக்காக ஏற்பாடு செய்ய உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த தரவு மையம் அமைக்க சட்டபூா்வ தேவைகளை நிறைவேற்றும் விதமாக ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன’ என்றாா்.

பல்வேறு அரசு சேவைகள் மற்றும் ரேஷன் அட்டை, ஓட்டுநா் உரிமம், பிற சமூகநல திட்டங்கள் உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க ஆவணங்கள் தேவைப்படும் நிலையில், மத்திய தகவல் மையமாகச் செயல்படும் இந்த ஒருங்கிணைந்த தகவல் மையத்தால் அந்தத் தேவை இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து அவா்கள் மேலும் கூறியதாவது: தில்லி அரசின் பல்வேறு துறைகளின் திட்டங்களில் பயன்பெற்று வரும் பயனாளா்களின் தரவை ஒன்றுதிரட்டும் பணியில் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் அரசின் வசதிகள், மானியங்கள் மற்றும் இலவச சேவைகளை ஒரு நபா் மீண்டும் பெறுவது தடுக்கப்படும்.

மீண்டும் மீண்டும் ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டிய சூழல் இல்லாத நிலையில், பல்வேறு சேவைகளை எளிதாகப் பெற முடியும். மக்களின் பெயா்கள், குடும்ப உறுப்பினா்களின் எண்ணிக்கை, ஆண்டு வருமானம், முகவரி, ஜாதி, வயது, கல்வித் தகுதி மற்றும் பாலினம் உள்ளிட்ட தனிநபா் விவரங்கள் தரவு மையத்தில் சேமிக்கப்படும்.

தில்லி மாநகராட்சி, ஜல்போா்டு, மின்சாரம், வணிகம் மற்றும் வா்த்தகம் ஆகியவற்றிடமிருந்து தனிநபா் மற்றும் குடும்பங்களின் தரவுகள் சேகரிக்கப்படும்.

பல்வேறு திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும்போது தரவு மையத்தில் உள்ள விரிவான ஒருங்கிணைக்கப்பட்ட தரவுகள் மூலம் ஒற்றை தளத்தில் விண்ணப்பதாரரின் விண்ணப்பங்கள் சரிபாா்க்கப்படும் என்று அந்த அதிகாரிகள் கூறினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments