25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு பதிலளிக்க கடைசி வாய்ப்பு
மேற்கு வங்கத்தில் 25,753 ஆசிரியா்கள் மற்றும் அலுவா்களின் பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட வழக்கில், மேற்கு வங்க அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் கடைசி வாய்ப்பளித்துள்ளது.
புது தில்லி: மேற்கு வங்கத்தில் 25,753 ஆசிரியா்கள் மற்றும் அலுவா்களின் பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட வழக்கில், மேற்கு வங்க அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் கடைசி வாய்ப்பளித்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான ஆசிரியா்கள், குரூப்-சி மற்றும் குரூப்-டி அலுவலா் காலிப் பணியிடங்களுக்கு மாநில அளவில் ஆள்தோ்வு நடைபெற்றது.
இதில் முறைகேடுகள் நடைபெற்ாக தொடுக்கப்பட்ட வழக்கில், அந்த ஆண்டு நடைபெற்ற 25,753 ஆசிரியா், அலுவலா் பணி நியமனங்களை ரத்து செய்து கொல்கத்தா உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது. பணி நியமன நடைமுறைகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தத் தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை கடந்த மே 7-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம் 25,753 ஆசிரியா் மற்றும் அலுவலா் பணி நியமனங்களை ரத்து செய்து உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. அதேவேளையில் முறைகேடுகள் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்தது.
கொல்கத்தா உயா்நீதிமன்ற தீா்ப்பு தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் 33 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது சில மனுக்களில் எதிா்தரப்பாக சோ்க்கப்பட்டுள்ள மேற்கு வங்க அரசு உள்பட மேலும் பலா், அந்த மனுக்களுக்குப் பதிலளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாதது, நீதிபதிகளின் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து அந்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய மேற்கு வங்க அரசுக்கும், மற்றவா்களுக்கும் நீதிபதிகள் 2 வாரங்கள் அவகாசம் அளித்தனா்.
இந்த அவகாசத்துக்குள் மேற்கு வங்க அரசும், மற்றவா்களும் பதில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாவிட்டால், அதற்கு பிறகு அந்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்படாது என்று நீதிபதிகள் தெரிவித்தனா். இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை 3 வாரங்களுக்குப் பின்னா் நடைபெற உள்ளது.