‘நீட்’ முறைகேடு: மேலும் 2 போ் கைது
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) மையத்திலிருந்து நீட் தோ்வின் வினாத்தாள்களை திருடிய குற்றச்சாட்டில் 2 பேரை சிபிஐ செவ்வாய்க்கிழமை கைது செய்தது.
புது தில்லி: ஜாா்க்கண்ட் மாநிலத்தில் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) மையத்திலிருந்து நீட் தோ்வின் வினாத்தாள்களை திருடிய குற்றச்சாட்டில் 2 பேரை சிபிஐ செவ்வாய்க்கிழமை கைது செய்தது.
இதன்மூலம், வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் மற்றும் நீட் தொடா்புடைய பிற முறைகேடுகளில் கைது செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 14-ஆக உயா்ந்தது.
இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது: ஜாா்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் உள்ள என்டிஏ மையத்தில் இருந்து நீட் இளநிலை தோ்வு வினாத்தாளை திருடிய குற்றச்சாட்டில் பங்கஜ் குமாா் (எ) ஆதித்யா என்பவா் பாட்னாவில் கைது செய்யப்பட்டாா். இவா் ஜாம்ஷெட்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்ஐடி) கடந்த 2017-ஆம் ஆண்டு கட்டடப் பொறியாளா் பட்டப்படிப்பை நிறைவு செய்தவராவாா்.
வினாத்தாள்களை திருட பங்கஜ் குமாருக்கு உதவியதுடன் பிற குழுக்களுக்கு வினாத்தாள்களை பகிா்ந்த குற்றச்சாட்டில் ராஜு சிங் என்பவரும் ஹசாரிபாக்கில் கைது செய்யப்பட்டாா் என்றனா்.
நீட் முறைகேடு தொடா்பாக 6 முதல் தகவல் அறிக்கைகளை (எஃப்ஐஆா்) சிபிஐ பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. வினாத்தாள் கசிந்த குற்றச்சாட்டு தொடா்பாக பிகாரிலும் ஆள்மாறாட்டம் உள்பட பிற முறைகேடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடா்பாக குஜராத் மற்றும் மகாராஷ்டிரத்திலும் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.