மும்பை: ஏர் இந்தியா விமானங்களில் சுமைகளை ஏற்றி, இறக்கும் பணிகளுக்கு நடைபெற்ற நேர்காணலுக்கு 25,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்ததால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனங்களின் விமானங்களில் பயணிகளின் உடமைகளை விமானங்களில் ஏற்றி, இறக்கும் பணி, உணவுகளை விமானங்களுக்கு எடுத்துச் செல்லும் பணி உள்ளிட்ட சுமை தூக்கும் பணியிடங்களை நிரப்புவதற்காக செவ்வாய்க்கிழமை நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
மொத்தம் 2,216 பணியிடங்களுக்கு மும்பை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறவிருந்த நிலையில், சுமார் 25,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திங்கள்கிழமை இரவு முதல் அலுவலகத்துக்கு வெளியே குவியத் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் மாதம் ரூ.20,000 முதல் 25,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பெருமளவிலான பட்டதாரி இளைஞர்களும் நேர்காணலுக்கு விண்ணப்பங்களுடன் வருகை தந்திருந்தனர்.
ஏர் இந்தியாவின் மும்பை அலுவலகத்துக்கு வெளியே குவிந்திருந்த சுமார் 25,000-க்கும் அதிகமான இளைஞர்கள் செவ்வாய்க்கிழமை காலை முந்தியடித்து நேர்காணலுக்கு நுழைய முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நிலைமை கட்டுப்பாட்டை இழந்த நிலையில், அனைவரையும் விண்ணப்பங்களை மட்டும் கொடுத்துச் செல்லுமாறும், அதிலிருந்து தேர்வு செய்து நேர்காணலுக்கு அழைப்பதாகவும் ஏர் இந்தியா நிர்வாகம் அறிவித்து நேர்க்காணலை ரத்து செய்துள்ளது.
ஏர் இந்தியா நுழைவு வாயிலில் இளைஞர்கள் குவிந்த காணொலியை பகிர்ந்த காங்கிரஸ் எம்பி வர்ஷா கெய்க்வாட் கூறியதாவது:
“மும்பையைப் பற்றிச் சொல்லும்போது, இங்கிருந்து யாரும் வெறுங்கையுடன் செல்வதில்லை, அனைவருக்கும் இங்கே பிழைக்க ஏதாவது வேலை கிடைக்கிறது என்று. ஆனால் மும்பையிலேயே வேலையில்லாத் திண்டாட்டத்தின் நிலையைப் பாருங்கள்.
600 சுமை தூங்கும் பணிகளுக்கு 25,000 பேர் குவிந்ததால் ஏர் இந்தியா ஊழியர்களால் நிலைமையை சமாளிக்க முடியவில்லை. உணவும், குடிநீருமின்றி இளைஞர்கள் குவிந்துள்ளனர்.
கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் இளைஞர்களின் நிலைமை மிகவும் மோசமாக்கியுள்ளது. போர் நடைபெறும் ரஷியா, உக்ரைனில்கூட வேலை செய்யத் தயாராக உள்ளனர்.
வேலை தேடும் இளைஞர்களை பக்கோடா போடவும், பஞ்சர் கடையை திறக்கவும் என்று உணர்வற்ற கருத்துகளை தெரிவிக்கின்றனர். இளைஞர்களின் துன்பங்களை பாஜக தலைவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்.
அரசின் ஒவ்வொரு துறைகளிலும் நூற்றுக்கணக்கான வேலைகள் இருந்தும், தேர்வு நடத்தப்படுவதில்லை, நடத்தினால் முறைகேடு நடக்கிறது. அல்லது, அவர்களின் நண்பர்களுக்கு ஒப்பந்த தொழிலாக வழங்கப்படுகிறது. மகாராஷ்டிரத்துக்கு வரும் தொழிலை குஜராத்துக்கு மத்திய அரசு மாற்றுகிறது.
மத்திய பாஜக அரசும், மாநில அரசும் நாட்டின் பொருளாதார தலைநகருக்கு என்ன செய்தது? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தேவை, வெற்று வாக்குறுதிகள் மற்றும் பொய்யான புள்ளிவிவரங்கள் அல்ல. நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தில் இந்த அரசு எப்போது தீவிரம் காட்டும்?” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்னதாக, குஜராத் தனியார் நிறுவனத்தில் 10 பணியிடங்களுக்கு 2,000 பேர் குவிந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.