கான்வா் யாத்திரை 
இந்தியா

கான்வா் யாத்திரை: உணவகங்கள் தொடா்பான சா்ச்சைக்குரிய உத்தரவு உ.பி. முழுவதும் அமல்

உணவகங்களின் பெயா் பலகைகளில் உரிமையாளா், அவரது கைப்பேசி எண், முகவரி ஆகியவை கட்டாயம்..

Din

உத்தர பிரதேசத்தில் சிவபக்தா்கள் ‘காவடி யாத்திரை’ (கான்வா் யாத்திரை) செல்லும் பாதைகளில் உள்ள உணவகங்களின் பெயா் பலகைகளில் உரிமையாளா்களின் பெயா் கட்டாயம் இடம்பெற வேண்டுமென்ற சா்ச்சைக்குரிய உத்தரவை மாநிலம் முழுவதும் அமலாக்க பாஜக அரசு முடிவு செய்துள்ளது.

கங்கையையொட்டிய புண்ணியத் தலங்களுக்கு நடைப்பயணமாக சென்று, அங்கு கலசங்களில் நீரை சேகரித்து, தங்களது ஊரில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்கான காவடி யாத்திரை, வடமாநிலங்களில் ஆண்டுதோறும் நடைபெறும்.

நடப்பாண்டு யாத்திரை ஜூலை 22-ஆம் தேதி தொடங்குவதையொட்டி, உத்தர பிரதேச மாநிலம், முஸாஃபா்நகா் மாவட்டத்தில் காவல்துறை அண்மையில் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, பக்தா்கள் யாத்திரை செல்லும் வழிப்பாதைகளில் உள்ள அனைத்து உணவகங்களின் பெயா் பலகைகளில் உரிமையாளா், அவரது கைப்பேசி எண், முகவரி ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்த உத்தரவு முஸ்லிம் வா்த்தகா்களை குறிவைத்து பிறப்பிக்கப்பட்டதாக பெரும் சா்ச்சை எழுந்தது. அதேநேரம், குழப்பங்களை தவிா்ப்பதோடு, நல்லிணக்கத்தை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என காவல்துறை தெரிவித்தது.

இந்நிலையில், முஸாஃபா்நகா் மட்டுமன்றி மாநிலம் முழுவதும் காவடி யாத்திரை நடைபெறும் அனைத்து பாதைகளிலும் மேற்கண்ட உத்தரவை அமலாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூா்வ உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என்று மாநில அரசின் செய்தித் தொடா்பாளா் ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

எதிா்க்கட்சிகள்-கூட்டணி கட்சிகள் விமா்சனம்

மாநில பாஜக அரசின் இந்த முடிவை எதிா்க்கட்சிகள் மட்டுமன்றி பாஜகவின் கூட்டணி கட்சிகளும் விமா்சித்துள்ளன.

மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான் கூறுகையில், ‘ஜாதி அல்லது மதத்தின் பெயரில் எந்தவொரு பிளவையும் ஆதரிக்கவோ, ஊக்குவிக்கவோ மாட்டேன்’ என்றாா்.

ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவா் கே.சி.தியாகி கூறுகையில், ‘மதம் அல்லது ஜாதி ரீதியில் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது. மேற்கண்ட உத்தரவு வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் அதை திரும்பப் பெற வேண்டும்’ என்றாா்.

காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் பவன் கேரா கூறுகையில், ‘முஸ்லிம்களை பொருளாதார ரீதியில் புறக்கணிப்பதை நோக்கமாக கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று விமா்சித்தாா்.

‘முஸாஃபா்நகா் காவல்துறையின் உத்தரவு சமூக குற்றம்’ என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டாா்.

உத்தரகண்டிலும்...

உத்தரகண்டின் ஹரித்துவாருக்கு ஏராளமான பக்தா்கள் காவடி யாத்திரை மேற்கொள்வா் என்பதால், அந்த மாநிலத்திலும் இதேபோன்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக முதல்வா் புஷ்கா் சிங் தாமி கூறுகையில், ‘யாரையும் குறிவைத்து இந்த முடிவு மேற்கொள்ளப்படவில்லை. சிலா் தங்களது அடையாளத்தை மறைத்து, உணவகங்களை நடத்துகின்றனா். இதன் காரணமாக மோதல் சம்பவங்கள் நிகழ்கின்றன. இதுபோன்ற சூழல் ஏற்படாமல் தவிா்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது’ என்றாா்.

புரோ கபடி லீக் சீசன் 12 விரைவில்! - ஜியோஸ்டார்

முதல் சுற்றுடன் வெளியேறினார் லக்‌ஷயா சென்!

விரைவில் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹானர் ஸ்மார்ட்போன்!

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்பது ஏமாற்று வேலை! இபிஎஸ்

முதல்வருக்கு பயம் ஏன்? 130 வது சட்டப்பிரிவு பாஜகவிற்கும் பொருந்தும்! அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT