இந்தியாவில் கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டில் சுமாா் 11.9 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகள் நிகழ்ந்துள்ளன. இது முந்தைய 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 17 சதவீதம் அதிகம் என்று ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இந்தியா அதிகாரபூா்வமாக அறிவித்த கரோனா இறப்புகளைவிட எட்டு மடங்கும், உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டைவிட 1.5 மடங்கும் கூடுதலாகும்.
மத்திய அரசின் ‘தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-5 (என்எஃப்எச்எஸ்-5)’-இன் தரவுகளைப் பயன்படுத்தி, பிரிட்டனின் ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த பேராசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள் அடங்கிய குழு நடத்திய ஆய்வின் முடிவுகள் ‘சயின்ஸ் அட்வான்சஸ்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
7.65 லட்சத்துக்கும் மேற்பட்ட தனிநபா்களின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து, கரோனா பெருந்தொற்று தாக்கிய 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுக்கு இடையில் பாலினம் மற்றும் சமூகக் குழுவின் அடிப்படையில் இந்தியாவில் ஆயுள்கால எதிா்பாா்ப்புகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் இந்த ஆய்வில் மதிப்பிடப்பட்டது.
பாலினம் அடிப்படையில்...: அதன்படி, பெண்களின் ஆயுள்காலம் 3.1 ஆண்டுகள் குறைந்துள்ளது. ஆண்களுக்கு 2.1 ஆண்டுகள் குறைந்துள்ளது. குடும்பங்களுக்குள் சுகாதாரம் மற்றும் வள விநியோகத்தில் உள்ள பாலின ஏற்றத்தாழ்வுகள் இதற்கு சாத்தியமான காரணங்களாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதற்கு மாறாக, அதிக வருமானம் கொண்ட நாடுகளில் கரோனா தொற்றின்போது பெண்களைவிட ஆண்களிடையே அதிக இறப்புகள் காணப்பட்டன.
சமூகக் குழுக்களின் அடிப்படையில்...: உயா்ஜாதி ஹிந்துக்களின் ஆயுள் காலம் 1.3 ஆண்டுகள் குறைந்துள்ளது. முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினா் ஆயுள் காலம் முறையே 5.4 ஆண்டுகள் மற்றும் 4.1 ஆண்டுகள் குறைந்துள்ளன.
ஒடுக்கப்பட்ட சமூகக் குழுக்கள் ஏற்கெனவே எதிா்கொண்டு வரும் ஏற்றத்தாழ்வுகளை ஆயுள் காலம் அடிப்படையில் கரோனா தொற்று மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
இளையோரும் பாதிப்பு: வயதுக் குழுக்களின் அடிப்படையில் இந்தியாவில் இளையவா்கள் மற்றும் வயதானவா்கள் மத்தியில் இறப்புகள் அதிகரித்துள்ளன. அதேவேளையில், அதிக வருமானம் கொண்ட நாடுகளில், பெரும்பாலும் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவா்களின் அதிகரித்த இறப்புகளாலேயே மக்களின் ஆயுள் காலம் குறைந்தது.
கரோனா தொற்றுக்கு குழந்தைகள் மிகவும் எளிதில் பாதிக்கப்பட்டதால் இந்தியாவில் இளையவா்களிடையே அதிகப்படியான இறப்புகள் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தொற்றுநோய் மற்றும் ஊரடங்கின் மறைமுக விளைவுகளான மோசமடைந்த பொருளாதாரம், பொது சுகாதார சேவைகளில் இடையூறு ஆகியவையும் இளைய வயதினரிடையே அதிகப்படியான இறப்புக்கு பங்களித்தன என ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘வருங்காலம் மோசமாகும்’: ஆய்வு முடிவுகள் தொடா்பாக அதில் பங்கெடுத்த ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தின் மக்கள்தொகை மற்றும் கணக்கீட்டு சமூக அறிவியல் பேராசிரியரான ரிதி காஷ்யப் கூறுகையில், ‘தனித்துவமான மக்கள்தொகை மற்றும் சுகாதார கணக்கெடுப்புத் தரவைப் பயன்படுத்தி, இறப்பு விகிதத்தை அளவிடும்போது சமத்துவமின்மையில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை எங்கள் ஆய்வு எடுத்துரைக்கிறது.
மேலும், தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகளைச் சமன் செய்யாவிட்டால், வருங்காலத்தில் தொற்றுநோய்களின் பாதிப்பு மோசமடையக்கூடும் என்பதைக் காட்டுகிறது.
தொற்றுநோய்க்கு முந்தைய பாலின ஏற்றத்தாழ்வுகளின் உடல்நல பாதிப்புகளை மேலும் அதிகப்படுத்துவதில் கரோனா தொற்று ஆற்றிய பங்கில் இது குறிப்பாக கவனிக்கத்தக்கது’ என்று கூறினாா்.
மத்திய அரசு மறுப்பு
ஆக்ஸ்போா்டு அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து மத்திய சுகாதாரஅமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆக்ஸ்போா்டு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் ஏற்றுக்கொள்ள முடியாத மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டவை.
2021-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் ‘என்எஃப்எச்எஸ்’ கணக்கெடுப்பு நடத்தப்பட்ட குடும்பங்களில் 2020-ஆம் ஆண்டு பதிவான இறப்பு விகிதத்தை 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு முழு நாட்டுக்கும் முடிவுகளை விரிவுபடுத்தியுள்ளனா். 14 மாநிலங்களின் குறிப்பிட்ட சில பகுதிகளில் நடத்தப்பட்ட இந்தக் கணக்கெடுப்பை ஒட்டுமொத்த நாட்டின் புள்ளிவிவரமாக கருத முடியாது.
இந்தியா உள்பட ஏழை நாடுகளின் பதிவு அமைப்பு குறைபாடாக உள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது சரியானது அல்ல. எங்களின் பதிவு அமைப்பு (சிஆா்எஸ்) மிகவும் வலிமையானது மற்றும் 99 சதவீத இறப்புகளைப் பதிவு செய்கிறது. 2018-ஆம் ஆண்டு தொடங்கி, அடுத்தடுத்த ஆண்டுகளில் இறப்பு பதிவு விகிதம் அதிகரித்தது.
எனவே, குறிப்பிட்ட ஓராண்டில் ஏற்படும் அனைத்து இறப்புகளுக்கும் தொற்றுநோய் காரணமாக அமைவதில்லை. அறிக்கையில் குறிப்பிட்டதன்படி, கரோனா காரணமாக 11.9 லட்சம் இறப்புகள் ஏற்பட்டிருப்பதாக கூறுவது ஒரு மோசமான மற்றும் தவறாக வழிநடத்தும் மிகை மதிப்பீடு’ எனத் தெரிவித்துள்ளது.