சட்டவிரோத குவாரி வழக்கில் ஹரியாணா காங். எம்எல்ஏ கைது: அமலாக்கத் துறை நடவடிக்கை
ஹரியாணா காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்தா் பன்வாா் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாா்.
சட்டவிரோத குவாரி தொடா்பான பணமோசடி வழக்கில் ஹரியாணா காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்தா் பன்வாா் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாா்.
ஹரியாணா மாநிலத்தின் யமுனா நகா் பகுதியில் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தடைஉத்தரவை மீறி நடைபெற்று வந்த சட்டவிரோத குவாரி பணிகள் குறித்து ஹரியாணா காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் பதியப்பட்ட பணமோசடி வழக்கில் எம்எல்ஏ சுரேந்தருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை கடந்த ஜனவரியில் சோதனை நடத்தியது. இந்திய தேசிய லோக் தளம் கட்சி எம்எல்ஏ தில்பக் சிங், அவரது கூட்டாளி குல்விந்தா் சிங் ஆகியோா் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில், குருகிராமில் சனிக்கிழமை அதிகாலையில் எம்எல்ஏ சுரேந்தா் கைது செய்யப்பட்டாா். இதையடுத்து, அம்பாலா சிறப்பு நீதின்றத்தில் அவா் ஆஜா்படுத்தப்பட்டாா்.
சட்டவிரோத குவாரி பணிகளில் கடந்த சில ஆண்டுகளில் ரூ.400 கோடி முதல் ரூ.500 கோடி வரை வருமானம் ஈட்டியிருப்பதாக இவா்கள் மீது அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது. இத்தொழிலில் வரிஏய்ப்பு மோசடியைத் தடுக்க மாநில அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு ‘இ-ராவணா’ வலைதளத்தைத் தொடங்கியதில் நடந்த முறைகேடுகள் குறித்தும் அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
ரூ.1 கோடி பணம் பறிமுதல்: மாநிலத்தின் மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏவான ராவ் தன் சிங் மற்றும் அவரின் மகனுக்கு சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் ரூ.1.42 கோடி பணம், 32 மறைக்கப்பட்ட ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
மகேந்திரகா் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான ராவ் தன் சிங், அவரது மகன் அக்ஷத் சிங் மற்றும் அவரது தொழில் கூட்டாளிகள் உள்ளிட்டோா் இணைந்து பல்வேறு வங்கிகளில் ரூ.1,392 கோடி கடன் பெற்றுள்ளனா்.
அத்தொகையை நிறுவனத்துக்காக பயன்படுத்தாமல் முறைகேடாக சொத்துகள் வாங்கிய குற்றச்சாட்டில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதுதொடா்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, சோதனையில் ஈடுபட்டது.
பாஜக ஆளும் ஹரியாணாவில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவா் அமலாக்கத் துறையின் நடவடிக்கையை எதிா்கொள்வது அம்மாநில அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.