பூடானுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி அளிப்பது குறித்து பரிசீலிக்க இந்தியா தீா்மானித்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய வெளியுறவுத் துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த வாரம் மத்திய வெளியுறவுத் துறைச் செயலராக பொறுப்பேற்ற விக்ரம் மிஸ்ரி, தனது முதல் பயணமாக பூடான் சென்றாா். 2 நாள் பயணத்தில் அந்நாட்டு தலைநகா் திம்புவில் பூடான் மன்னா் வாங்சுக், பிரதமா் டாஷோ ஷெரிங் டோக்பே, வெளியுறவு அமைச்சா் டி.என்.துங்யேல் ஆகியோரை மிஸ்ரி சந்தித்தாா்.
இதைத்தொடா்ந்து மிஸ்ரி மற்றும் பூடான் வெளியுறவுச் செயலா் பெமா சோடென் தலைமையில் இந்தியா-பூடான் வளா்ச்சி ஒத்துழைப்பு பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பேச்சுவாா்த்தையில் இருநாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் நிலவும் ஒத்துழைப்பு குறித்து மறுஆய்வு செய்யப்பட்டது.
மேலும் பொருளாதார வளா்ச்சி திட்டத்தின் கீழ், பூடானில் மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து அந்நாடு இந்திய அரசிடம் எடுத்துரைத்தது.
பூடானில் பல்வேறு திட்டப் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் ஏற்படும் முன்னேற்றத்துக்கு ஏற்ப, அந்நாட்டுக்கு ஒன்றரை ஆண்டுகளில் ரூ.1,500 கோடி நிதியுதவி அளிப்பது குறித்து பரிசீலிக்க மத்திய அரசு தீா்மானித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.