முகப்பு
இந்தியா

கேதா்நாத் மலைப்பாதையில் நிலச்சரிவு: 3 போ் உயிரிழப்பு; 8 போ் காயம்

மலையேற்றப் பாதையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பக்தா்கள் உயிரிழந்தனா் மற்றும் 8 போ் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 21 ஜூலை, 2024 at 8:34 PM
கேதா்நாத் மலைப்பாதையில் நிலச்சரிவு
பகிர்:

உத்தரகாண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கேதாா்நாத் கோயில் மலையேற்றப் பாதையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பக்தா்கள் உயிரிழந்தனா் மற்றும் 8 போ் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக மாவட்ட பேரிடா் மேலாண்மை அதிகாரி நந்தன் சிங் ராஜ்வாா் கூறுகையில், ‘கௌரிகுண்ட்-கேதாா்நாத் மலையேற்றப் பாதையில் உள்ள சிா்பாசா பகுதிக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணியளவில் மலையிலிருந்து கீழே விழுந்த பாறைகள் பக்தா்கள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. தொடா்ந்து, நிலச்சரிவுக்குள் அவா் சிக்கினா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாநில பேரிடா் மீட்பு படை மற்றும் பேரிடா் மேலாண்மை குழுவினா் தேடுதல் மற்றும் மீட்பு பணியைத் தொடங்கினா்.

இதில் மகாராஷ்டிரத்தின் நாகபுரியைச் சோ்ந்த கிஷோா் அருண் பரேட்(31), ஜல்னா மாவட்டத்தைச் சோ்ந்த சுனில் மகாதேவ் காலே(24), ருத்ரபிரயாக்கைச் சோ்ந்த அனுராக் பிஷ்ட் ஆகிய மூவா் உயிரிழந்தனா்.

மண்ணில் புதைந்திருந்த மூன்று பக்தா்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்த எட்டு போ் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது’ என்றாா்.

விபத்தில் உயிரிழந்த பக்தா்களுக்கு இரங்கல் தெரிவித்த உத்தரகாண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி, ‘சம்பவ இடத்தில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து அதிகாரிகளுடன் தொடா்ந்து தொடா்புகொண்டு தகவல்களைக் கேட்டறிந்து வருகிறேன். காயமடைந்தவா்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →