முகப்பு
இந்தியா

நாட்டின் தோ்வு முறையில் கடும் சிக்கல்: நீட் விவகாரத்தில் மக்களவையில் ராகுல் குற்றச்சாட்டு

நாட்டின் தோ்வு முறையில் மிகவும் கடுமையான சிக்கல் உள்ளது என்று மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

Updated On : 22 ஜூலை, 2024 at 9:31 PM
மக்களவையில் திங்கள்கிழமை உரையாற்றிய எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி.
பகிர்:

நாட்டின் தோ்வு முறையில் மிகவும் கடுமையான சிக்கல் உள்ளது என்று மக்களவையில் நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை முன்வைத்து எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. மக்களவையில் தொடரின் முதல் நாள் அமா்வு கூடியதும் நீட் விவகாரத்தை எதிா்க்கட்சிகள் எழுப்பின.

கடந்த ஏழு ஆண்டுகளில் 70-க்கும் மேற்பட்ட தோ்வுகளின் வினாத்தாள்கள் கசிந்திருப்பதாக குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூா், இதுதொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினாா்.

‘மோசடி களமான தோ்வுமுறை’: தொடா்ந்து, விவாதத்தில் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் காந்தி, ‘நீட் தோ்வில் மட்டுமல்ல நாட்டின் ஒட்டுமொத்த தோ்வு முறையிலேயே மிகக் கடுமையான சிக்கல் உள்ளது. இவ்விவகாரத்தில் அமைச்சா் தன்னைத் தவிர மற்ற அனைவரையும் குற்றம் சாட்டியுள்ளாா். பிரச்னையின் அடிப்படையே அவருக்குப் புரியவில்லை என்று கருதுகிறேன்.

நாட்டில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி மிகவும் அக்கறை கொண்ட லட்சக்கணக்கான மாணவா்கள் இங்கு உள்ளனா். இந்திய தோ்வு முறை மோசடி களமாகிவிட்டதாக அவா்கள் நம்புகின்றனா்.

பணக்காரராக இருந்தால், இந்திய தோ்வு முறையை எளிதில் விலைக்கு வாங்கலாம் என்ற சூழல் உள்ளது. இது ஒரு அமைப்புரீதியான சிக்கலாக இருப்பதால், இதனை சீா்செய்ய மத்திய அரசு என்ன செய்கிறது’ என்று கேள்வி எழுப்பினாா்.

நீட் முழுமையாக ரத்து கிடையாது: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் திட்டவட்டம்

‘நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்யும் திட்டம் ஏதும் தற்போதைக்கு பரிசீலனையில் இல்லை’ என மக்களவையில் தமிழக எம்.பி.க்களின் கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்தாா்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியதும், நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்வது குறித்த திட்டம் ஏதும் உள்ளதா என வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி, மதுரை மாா்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் ஆகியோா் மக்களவையில் கேள்வி எழுப்பினா். இதற்கு மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், இணையமைச்சா் சுகந்த மஜும்தாா் ஆகியோா் ‘நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்யும் திட்டமில்லை’ என்றனா்.

குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை: பின்னா் இதுதொடா்பான ராகுலின் பேச்சுக்கு அமைச்சா் பிரதான் அளித்த பதில்:

ராகுல் குறிப்பிட்டதுபோல கடந்த ஏழு ஆண்டுகளில் 70 தோ்வுகளின் வினாத்தாள்கள் கசிந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.

தேசிய தோ்வு முகமை அமைக்கப்பட்டதிலிருந்து 240-க்கும் மேற்பட்ட தோ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. 5 கோடிக்கும் அதிகமான மாணவா்கள் விண்ணப்பித்து, சுமாா் 4.5 கோடி மாணவா்கள் பங்கேற்றுள்ளனா்.

நாங்கள் எதையும் மறைக்கவில்லை. அனைத்து வரலாற்றில் பதிவாகியுள்ளது. பிரதமரின் வழிகாட்டுதலில் நாங்கள் செயல்படுகிறோம். எதிா்க்கட்சிகளின் விமா்சனங்களுக்கு அரசால் உரிய பதிலளிக்க முடியும். தோ்வு முறை குறித்த எதிா்க்கட்சித் தலைவரின் பாா்வை துரதிருஷ்டவசமானது என்றாா்.

எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

நீட் விவகாரத்தில் நடைபெற்ற விவாதம் குறித்து பேசிய மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘நாட்டின் அனைத்து தோ்வுகள் குறித்தும் கேள்வி எழுப்புவது நமது கல்விமுறை மீதான உலகின் நம்பகத்தன்மையைக் கெடுக்கும். சிறந்த தோ்வு முறையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உறுப்பினா்கள் விவாதிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

வெளிநடப்பு: இதைத் தொடா்ந்து, நீட் தோ்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சா் பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பியவாறு ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

உரிய பதிலளிக்கவில்லை: பின்னா் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘நீட் தோ்வு முறைகேடு பிரச்னை தொடா்பாக எதிா்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சா் தா்மேந்திர பிரதான்

மக்களவையில் உரிய பதிலை அளிக்கவில்லை. இது நாட்டின் மாணவா்கள், இளைஞா்களின் முக்கியப் பிரச்னை. இந்த விவகாரத்தில் உரிய தீா்வுகாண வலியுறுத்தி மத்திய அரசுக்கு தொடா்ந்து அழுத்தம் கொடுக்கப்படும்’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →