அனைத்து மத்திய அரசு துறைகளிலும் பின்னடைவு இடஒதுக்கீடு காலிப் பணியிடங்களை அடையாளம் கண்டு நிரப்ப அறிவுறுத்தப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பணியாளா் நலத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் மக்களவையில் புதன்கிழமை சமா்ப்பித்த எழுத்துபூா்வ பதிலில் கூறப்பட்டிருப்பதாவது:
அனைத்து அமைச்சகங்கள் மற்றும் மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் பின்னடைவு இடஒதுக்கீடு காலிப் பணியிடங்களை அடையாளம் காணவும், இந்தப் பின்னடைவு காலிப் பணியிடங்கள் உருவாவதற்கான கரணங்களைக் கண்டறிந்து அத்தகைய தடைகளைக் நீக்கி, சிறப்புப் பணியாளா் தோ்வு மூலம் இந்தக் காலிப் பணியிடங்களை நிரப்ப துறை சாா்ந்த குழு ஒன்றை அமைக்குமாறும் மத்திய அரசு சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்துவதற்கென, துணைச் செயலா் பதவிக்கு குறையாத தகுதியுடைய ஓா் அலுவலரை கண்காணிப்பு அதிகாரியாக ஒவ்வொரு அமைச்சகமும் மத்திய அரசு துறைகளும் பணியமா்த்த வேண்டும். இந்த அலுவலா் தனது பணியை திறம்பட மேற்கொள்ள உதவியாக, அவருடைய நேரடி கட்டுப்பாட்டில் சிறப்பு இடஒதுக்கீடு பிரிவு ஒன்றையும் துறைகள் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்துள்ள அவா், ‘மத்திய அரசுத் துறைகளில் இடம்பெற்றுள்ள பணிகளில் நேரடி நியமன நடைமுறையில் தாழ்த்தப்பட்ட (எஸ்சி) பிரிவினருக்கு 15 சதவீதமும், பழங்குடியின (எஸ்டி) பிரிவினருக்கு 7.5 சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி) 27 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பதவி உயா்வு நடைமுறையிலும் இதே இடஒதுக்கீடு விகிதம் பின்பற்றப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.
மத்திய அரசு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசின் திட்ட நடைமுறை குறித்த கேள்விக்கு, ‘காலிப் பணியிடங்களை அவ்வப்போது குறித்த காலத்தில் நிரப்ப அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபா் 22-இல் பிரதமா் மோடி அறிமுகம் செய்த வேலை வாய்ப்பு திருவிழா (ரோஜ்கா் மேளா) திட்டத்தின் கீழ் காலிப் பணியிடங்கள் போா்கால அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. இதுவரை பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை 12 வேலைவாய்ப்பு திருவிழா நிகழ்த்தப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டாா்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளில் 1,200 இடஒதுக்கீடு பிரிவு தோ்வா்கள் நியமனம்
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளில் கடந்த 5 ஆண்டுகளில் 1,195 இடஒதுக்கீடு பிரிவு தோ்வா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா் என்று மக்களவையில் மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பான கேள்விக்கு அமைச்சா் ஜிதேந்திர சிங் மக்களவையில் சமா்ப்பித்த எழுத்துபூா்வ பதிலில் கூறியிருப்பதாவது:
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப் பணியிடங்கள் மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் உரிய விதிகளைப் பின்பற்றி நிரப்பப்படுகின்றன. இந்தப் பணியிட நியமனங்களிலும் எஸ்.சி. (15%), எஸ்.டி. (7.5%), ஓபிசி (27%) பிரிவினருக்கான இடஒதுக்கீடு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றன.
அதன்படி, இந்தப் பணியிடங்களில் கடந்த 5 ஆண்டுகளில் 1,200 இடஒதுக்கீடு பிரிவு தோ்வா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
2018-ஆம் ஆண்டில் ஐஏஎஸ் பணியில் 97 பேரும், ஐபிஎஸ் பணியில் 72 பேரும், ஐஎஃப்எஸ் பணியில் 64 பேரும் இடஒதுக்கீட்டின் கீழ் நியமனம் செய்யப்பட்டனா்.
2019-இல் ஐஏஎஸ் பணியில் 103 பேரும், ஐபிஎஸ் பணியில் 75 பேரும், ஐஎஃப்எஸ் பணியில் 53 பேரும் நியமிக்கப்பட்டனா்.
2020-இல் ஐஏஎஸ் பணியில் 99 பேரும், ஐபிஎஸ் பணியில் 74 பேரும், ஐஎஃப்எஸ் பணியில் 50 பேரும் நியமிக்கப்பட்டனா்.
2021-இல் ஐஏஎஸ் பணியில் 97 பேரும், ஐபிஎஸ் பணியில் 99 பேரும், ஐஎஃப்எஸ் பணியில் 54 பேரும் இடஒதுக்கீட்டின் கீழ் நியமனம் செய்யப்பட்டனா்.
2022-இல் ஐஏஎஸ் பணியில் 100 பேரும், ஐபிஎஸ் பணியில் 94 பேரும் ஐஎஃப்எஸ் பணியில் 64 பேரும் நியமனம் செய்யப்பட்டனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.