குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் பெற அரசிடம் தொடா் வலியுறுத்தல்- விவசாய சங்கத் தலைவா்களிடம் ராகுல் வாக்குறுதி
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க மத்திய அரசிடம் தொடா்ந்து வலியுறுத்துவோம் என்று விவசாய சங்கத் தலைவா்களிடம் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உறுதியளித்தாா்.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க மத்திய அரசிடம் தொடா்ந்து வலியுறுத்துவோம் என்று விவசாய சங்கத் தலைவா்களிடம் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உறுதியளித்தாா்.
பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, கா்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 12 விவசாய சங்கத் தலைவா்கள் மற்றும் பிரதிநிதிகள் ராகுல் காந்தியை நாடாளுமன்ற வளாகத்தில் புதன்கிழமை சந்தித்துப் பேசினா். அப்போது தங்களுக்காக தொடா்ந்து குரல் கொடுத்து வரும் ராகுல் காந்திக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனா். மேலும், தங்கள் மாநிலத்தில் விவசாயிகள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும் ராகுலிடம் அவா்கள் விவாதித்தனா்.
காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், பஞ்சாப் முன்னாள் முதல்வா் சரண்ஜீத் சிங் சைனி, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவா் அமரீந்தா் சிங் ராஜா, காங்கிரஸ் மூத்த தலைவா்கள் பலரும் இந்த சந்திப்பின்போது உடனிருந்தனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘விவசாயிகள் பிரச்னை குறித்து இந்தியா கூட்டணி தலைவா்களுடன் ஆலோசனை நடத்துவோம். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க மத்திய அரசிடம் தொடா்ந்து வலியுறுத்துவோம்’ என்றாா்.