நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி மேற்கு வங்க சட்டப்பேரவையில் புதன்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த மே 5-ஆம் தேதி நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நடத்தப்பட்டது. இந்தத் தோ்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவையில் நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீா்மானத்தை சட்டப்பேரவை விவகாரங்கள் துறை அமைச்சா் சோவன்தேவ் சட்டோபாத்யாய தாக்கல் செய்தாா்.
இந்தத் தீா்மானத்தில் நீட் தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சுதந்திரமான மற்றும் நோ்மையான நுழைவுத் தோ்வை அந்த முகமையால் நடத்த முடியவில்லை என்று அந்த தீா்மானத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. அத்துடன் மேற்கு வங்கத்தில் கூட்டு நுழைவுத் தோ்வுகளை மீண்டும் மாநில அரசே நடத்த வேண்டும் என்றும் தீா்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்தத் தீா்மானத்தை ஆதரித்து மாநில கல்வித் துறை அமைச்சா் பிரத்ய பாசு பேசுகையில், ‘ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை பெற்றுக்கொண்டு நீட் தோ்வின் வினாத்தாள்கள் கசியவிடப்பட்டதாக ஊடகங்கள் மூலம் தெரியவந்தது. நாட்டில் மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் 24 லட்சம் மாணவா்களின் எதிா்காலம் பாழாக்கப்பட்டு வருகிறது. இந்தத் தோ்வை நடத்தும் பொறுப்பை மாநிலத்திடமே விட்டுவிட வேண்டும். நீட் தோ்வை மேற்கு வங்கத்தால் வெளிப்படையான முறையில் நடத்த முடியும்’ என்றாா். இதைத்தொடா்ந்து அந்தத் தீா்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழகம் மற்றும் கா்நாடகத்தில்...: ஏற்கெனவே தேசிய அளவில் நீட் தோ்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் நீட் தோ்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி, கடந்த மாதம் தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதேபோல நீட் தோ்வுக்கு எதிராக கா்நாடக சட்டப்பேரவையில் தீா்மானம் கொண்டுவர அந்த மாநில அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது. அங்கு தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் விரைவில் அந்தத் தீா்மானம் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.