மதத்தின் அடிப்படையில் சட்டப்பேரவையை பிரிக்க விரும்பவில்லை என திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி இன்று (ஜூலை 29) தெரிவித்தார்.
மேற்கு வங்க சட்டப்பேரவையில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது,
''மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜக தலைவர் ஒருவர் பேசி வருகிறார். அவைக்கு வந்து பாருங்கள். அனைத்து மதத்தினரும் இங்கு உள்ளனர். அவையை மதத்தின் அடிப்படையில் பிரிக்க நானும் எனது கட்சியும் விரும்பவில்லை'' என மம்தா பானர்ஜி பேசினார்.
அவர் பேசும்போது பாஜகவைச் சேர்ந்தவர்கள் அவையில் யாரும் இல்லை என்றாலும், அவர் குறிப்பிட்டது எதிர்க்கட்சித் தலைவரான பாஜகவை சேர்ந்த சுவேந்து அதிகாரியைத் தான் என அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
தில்லியில் நீதி ஆயோக் கூட்டத்தின்போது முதல்வர் மம்தா பானர்ஜியின் மைக் அணைக்கப்பட்டது தொடர்பாக முன்மொழிந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள சுவேந்து அதிகாரி, ''என்னுடைய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. தேசத்தின் மீது பற்று கொண்டவர்கள் பக்கம் திரிணமூல் காங்கிரஸ் நிற்க வேண்டும், அவர்களுக்காக பேச வேண்டும் என்பதையே சுட்டிக்காட்ட விரும்பினேன். எங்களுடன் நிற்காதவர்கள், தேசம் மற்றும் மாநிலத்தின் நலனுக்கு எதிராக செயல்படுவது அம்பலப்படுத்தப்பட வேண்டும்'' எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.