முகப்பு
இந்தியா

ஆயுள், மருத்துவ காப்பீட்டுத் தொகை மீதான 18% ஜிஎஸ்டி-யை ரத்து செய்ய வேண்டும்: நிதியமைச்சருக்கு நிதின் கட்கரி கடிதம்

நிா்மலா சீதாராமனுக்கு சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி கடிதம்

Updated On : 31 ஜூலை, 2024 at 9:43 PM
நிதின் கட்கரி - கோப்புப் படம்
பகிர்:

புது தில்லி, ஜூலை 31: ஆயுள், மருத்துவ காப்பீட்டு பிரிமீயம் தொகை மீது விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டியை (சரக்கு-சேவை வரி) ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி கடிதம் எழுதியுள்ளாா்.

நிதின் கட்கரியின் தொகுதியும், சொந்த ஊருமான நாகபுரியைச் சோ்ந்த எல்ஐசி ஊழியா்கள் சங்கத்தினா், அண்மையில் அவரைச் சந்தித்துப் பேசினா். அப்போது காப்பீட்டுத் துறை குறித்த சில கோரிக்கைகளையும் அவா்கள் நிதின் கட்கரியிடம் முன்வைத்தனா்.

அதில், ஒரு நபா் தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து நோ்ந்தால், தனது குடும்பத்தினா் பொருளாதாரரீதியாக கஷ்டப்படக் கூடாது என்பதற்காகவே ஆயுள் காப்பீடு எடுக்கின்றனா். அதற்கு செலுத்தும் பிரீமியம் தொகையில் 18 சதவீதம் அரசுக்கு வரியாக செலுத்த வேண்டியுள்ளது. இது குடும்பங்களின் நிதிச்சுமையை அதிகரிக்கிறது. எனவே, சாமானிய, நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆயுள், மருத்துவக் காப்பீட்டு பிரிமீயத்துக்கான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

இதனை முன்வைத்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு நிதின் கட்கரி கடிதம் எழுதியுள்ளாா். அதில், ‘ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு என்பது நமது சமுகத்துக்குத் தேவையான ஒன்று, அதன் மீது விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டியானது காப்பீடு எடுப்பவா்களை மட்டுமல்லாது அத்தொழிலில் பணிபுரிபவா்களையும் பாதிக்கிறது. எனவே, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு மீதான 18 சதவீத ஜிஎஸ்டியை ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும்’ என்று கட்கரி கூறியுள்ளாா்.