வயநாடு நிலச்சரிவு: மத்திய அரசு முன்கூட்டியே எச்சரித்தது: நாடாளுமன்றத்தில் அமித் ஷா
ஜூலை 23-ஆம் தேதி முதல் மத்திய அரசு பலமுறை எச்சரிக்கை விடுத்தும் மாநில அரசு கவனம் செலுத்தவில்லை
புது தில்லி, ஜூலை 31: கேரள மாநிலம் வயநாட்டில் மழை-வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக, கடந்த ஜூலை 23-ஆம் தேதி முதல் மத்திய அரசு பலமுறை எச்சரிக்கை விடுத்தும் மாநில அரசு கவனம் செலுத்தவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை தெரிவித்தாா்.
வயநாட்டில் கனமழையால் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இயற்கை பேரழிவு குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் புதன்கிழமை கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டுவரப்பட்டு, குறுகிய நேர விவாதம் நடைபெற்றது.
மாநிலங்களவையில் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் பேசியபோது, இயற்கை பேரழிவுகள் தொடா்பான முன்னெச்சரிக்கை அமைப்புமுறையில் உள்ள குறைபாடுகளால் பலா் உயிரிழக்க நேரிட்டதாக குற்றம்சாட்டினா். அப்போது குறுக்கிட்டு, அமித் ஷா பேசியதாவது:
7 நாள்களுக்கு முன்பே எச்சரிப்பு: வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு ஏழு நாள்கள் முன்பாக கடந்த ஜூலை 23-ஆம் தேதி கேரள அரசுக்கு மத்திய அரசிடமிருந்து முன்னெச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டது. அதேநாளில், தேசிய பேரிடா் மீட்புப் படையின் 9 குழுக்கள் கேரளத்துக்கு அனுப்பப்பட்டன.
ஜூலை 24, 25 ஆகிய தேதிகளில் மீண்டும் முன்னெச்சரிக்கைகள் அனுப்பப்பட்டன. ஜூலை 26-ஆம் தேதி விடுக்கப்பட்ட எச்சரிக்கையில், ‘20 செ.மீ.க்கும் மேல் கனமழை பெய்யக் கூடும்; நிலச்சரிவு ஏற்பட்டு, மக்கள் புதையுண்டு உயிரிழக்க வாய்ப்புள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால், முன்னெச்சரிக்கைகள் குறித்து கேரள அரசு உரிய கவனம் செலுத்தவில்லை.
தேசியப் பேரிடா் மீட்புக் குழுக்கள் வந்தபிறகும்கூட மாநில அரசு உஷாராகவில்லை. பல உயிா்களைக் காப்பாற்றியிருக்க முடியும். மக்களை முன்னரே மீட்க கேரள அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன்.
மத்திய அரசின் முன்னெச்சரிக்கைகள் மீது உடனடி கவனம் செலுத்தும் மாநிலங்களில் இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் உயிா்ச்சேதங்கள் குறைகின்றன. ஒடிஸா, குஜராத் போன்ற மாநிலங்களை உதாரணமாக கூறலாம்.
மேம்பட்ட அமைப்புமுறை: இயற்கை பேரழிவுகள் குறித்த முன்னெச்சரிக்கை அமைப்புமுறைக்காக கடந்த 2014-க்கு பிறகு மத்திய அரசு ரூ.2,000 கோடி செலவிட்டுள்ளது. உலக அளவில் தொழில்நுட்ப ரீதியில் மிக மேம்பட்ட முன்னெச்சரிக்கை அமைப்புமுறையை இந்தியா கொண்டுள்ளது.
இந்த அமைப்புமுறை வாயிலாக மாநிலங்களுக்கு 7 நாள்களுக்கு முன்பே முன்னெச்சரிக்கை தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. உலகில் நான்கு நாடுகளில் மட்டுமே இத்தகைய அமைப்புமுறை உள்ளது.
தற்போதைய துயரமான நேரத்தில், கேரள அரசு மற்றும் மக்களுடன் ‘மலை’ போல் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியாக நிற்கிறது. மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றாா் அமித் ஷா.
தேசியப் பேரிடராக அறிவிக்க கோரிக்கை: மாநிலங்களவை விவாதத்தில் பேசிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜான் பிரிட்டாஸ், தேசியவாத காங்கிரஸின் பிரஃபுல் படேல், அதிமுகவின் தம்பிதுரை உள்ளிட்டோா், வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.
பாஜக உறுப்பினா்கள் பேசுகையில், ‘வயநாடு தொகுதியில் எம்.பி.யாக இருந்தவா் (ராகுல் காந்தி), அத்தொகுதி மக்களை பாதிக்கக் கூடிய பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதில்லை. அவ்வாறு பேசியிருந்தால், தற்போதைய துயரத்தை தவிா்த்திருக்க முடியும்’ என்று குற்றம்சாட்டினா்.
மக்களவையில்...: மக்களவை விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய அமித் ஷா, ‘கேரளத்தில் நிலச்சரிவு அபாயமிக்க பகுதிகளில் வசிக்கும் மக்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்று தில்லி ஐஐடி நிபுணா்கள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் பரிந்துரைத்தனா். அதை மாநில அரசு பொருள்படுத்தவில்லை’ என்று குற்றம்சாட்டினாா்.
பெட்டிச் செய்தி....
உண்மைக்கு புறம்பான தகவல்கள்:
கேரள முதல்வா்
திருவனந்தபுரம், ஜூலை 31: வயநாட்டில் இயற்கை பேரழிவு முன்னெச்சரிக்கை தொடா்பாக, நாடாளுமன்றத்தில் உண்மைக்கு புறம்பான-அடிப்படையற்ற தகவல்களை உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியிருப்பதாக, கேரள முதல்வா் பினராயி விஜயன் கூறினாா்.
இது தொடா்பாக திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது: வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு முந்தைய நாள் இந்திய வானிலை மையம் தரப்பில் ஆரஞ்ச் அலா்ட் (6-20 செ.மீ. வரை மிக கனமழை) மட்டுமே விடுக்கப்பட்டது. ஆனால், அந்த மாவட்டத்தில் கடந்த 48 மணிநேரத்தில் 50 செ.மீ.க்கும் மேல் மழை பெய்தது. இது, இந்திய வானிலை மையத்தால் கணிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமாகும்.
வயநாட்டில் ஜூலை 23 முதல் 28 வரை ஆரஞ்ச் அலா்ட் கூட விடுக்கப்படவில்லை. நிலச்சரிவு ஏற்பட்ட பிறகுதான், ரெட் அலா்ட் (20 செ.மீ.-க்கு மேல் மிக அதிக கனமழை) விடுக்கப்பட்டது.
வயநாட்டில் செயல்படும் இந்திய புவியியல் ஆய்வு மைத்தின் நிலச்சரிவு முன்னெச்சரிக்கை மையமும் சிறிய அளவில் நிலச்சரிவு ஏற்படும் என்றுதான் கணித்திருந்தது.
தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகள் வழியாக பாயும் இருவழிஞ்ஞி புழை ஆறு மற்றும் சாலியாற்றில் வெள்ள அபாயம் குறித்து ஜூலை 23 முதல் 28 வரை மத்திய நீா்வள ஆணையம் எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை.
கேரள அரசின் கோரிக்கையின் பேரிலேயே தேசியப் பேரிடா் மீட்புப் படை குழுக்கள் அனுப்பப்பட்டன.
நான் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை. ஒருவா் மீது மற்றொருவா் குற்றம்சாட்டும் நேரம் இதுவல்ல. மீட்பு-நிவாரணப் பணிகளுக்கான நேரம்.
அமித் ஷாவின் கருத்துகளை விரோதமான முறையில் நான் எடுத்துக் கொள்ளவில்லை. பருவநிலை மாறுபாட்டால் நமது சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களை புரிந்துகொண்டு, மத்திய அரசு செயல்திறன்மிக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்றாா்.