இந்தியா

உ.பி., ஹரியாணாவிடம் தண்ணீர் கேட்ட தில்லி அமைச்சர்

தில்லியில் தண்ணீர் பற்றாக்குறையினால் தில்லி அரசு உ.பி. மற்றும் ஹரியாணா அரசுகளிடம் தண்ணீர் கேட்டு கடிதம்

DIN

தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க தில்லி நீர்வளத் துறை அமைச்சர் அதிஷி உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியாணா அரசுகளிடம் தண்ணீர் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

தில்லியில் கடும் வெப்பம் நிலவுவதால், கடந்த சில தினங்களாக கடும் தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சந்தித்து வருகிறது. தில்லியில் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க தில்லி அரசு அவசர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் தண்ணீர் நெருக்கடி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால், தில்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியாணா அரசுகளிடம் தண்ணீர் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, ”தில்லி இந்த ஆண்டு மிக மோசமான தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்கிறது என்பதனை அறிந்திருப்பீர்கள். கடந்த ஆண்டுகளைப் போல் இல்லாமல், இந்த ஆண்டு தண்ணீரின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. வெப்பநிலை கிட்டத்தட்ட 50 டிகிரியைத் தொடும் நிலையில், தில்லியின் பல பகுதிகளில் கடும் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தில்லியில் வசிக்கும் மக்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்காக, நமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய யமுனையில் தண்ணீர் அவசரமாகத் தேவைப்படுகிறது.

தண்ணீர் என்பது அனைத்து மனிதர்களின் தேவைக்கும் இன்றியமையாத ஒரு பொருள். சுத்தமான குடிநீர் என்பது ஒவ்வொரு மனிதனின் உரிமை. உண்மையில், தாகம் எடுப்பவர்களுக்கு தண்ணீர் கொடுப்பது மிகவும் உன்னதமான செயல் என்பதை நமது பண்டைய நூல்கள் அனைத்தும் நமக்குக் கற்பிக்கின்றன.

இந்தக் கடிதத்தின் மூலம், எங்கள் கோரிக்கையினைப் பரிசீலித்து, குறைந்தபட்சம் அடுத்த ஒரு மாதத்திலாவது யமுனையில் கூடுதல் தண்ணீரை விடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தில்லி அரசும், தில்லியில் வசிக்கும் மக்களும் உங்களின் நேர்மறையான பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தில்லியில் கார்களைக் குடிநீர் கொண்டு கழுவுதல், வீட்டுப் பயன்பாட்டிற்கான குடிநீரை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துதல் மற்றும் நிரம்பி வழியும் நீர்த் தொட்டிகள் முதலான செயல்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தில்லி அரசு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"பராசக்தி" படப்பிடிப்பு நிறைவு! கொண்டாடிய படக்குழு! | SK | Sudha Kongara

ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களவைத் தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

குறைந்த வட்டி, உடனடி கடன்! Online Scam-ல் மாட்டிக்காதீங்க! | Cyber Scams | Online Shield

கர்பா குயின்... அனன்யா!

மகளிர் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக ஆஸி. பந்துவீச்சு!

SCROLL FOR NEXT