அசாமில் வெள்ளம்: 4.2 லட்சம் பேர் பாதிப்பு!
அசாமில் கடும் வெள்ளத்தினால் இயல்பு வாழ்க்கை மோசமாக பாதிப்பு
அசாமில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தினால் இயல்பு வாழ்க்கை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
அசாமில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தினால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், இந்த ஆண்டு வெள்ளம், நிலச்சரிவு மற்றும் புயலினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் 10 மாவட்டங்களில் வெள்ளத்தால் 4.2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 ஹெக்டேர் பயிர்நிலங்கள் சேதமடைந்துள்ளன. கரைகள், சாலைகள் மற்றும் பாலங்களும் சேதமடைந்துள்ளன. மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 46,000 வீட்டு விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
அசாம் மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருப்பதாவது, சுமார் 32,000 பேர் தஞ்சம் புகுந்துள்ள 6 மாவட்டங்களில் 167 நிவாரண முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன; மேலும் 4 மாவட்டங்களில் 73 நிவாரண விநியோக மையங்களும் நிறுவப்பட்டுள்ளன. நிவாரண விநியோக மையங்களின் மூலம் அரிசி, பருப்பு, உப்பு, கடுகு எண்ணெய் முதலானவை வழங்கப்படுகின்றன.