மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின்போது சமூக ஊடகக் கணக்குகளில் தங்கள் பெயருடன் சோ்க்கப்பட்ட ‘மோடியின் குடும்பம்’ அடைமொழியை தொண்டா்கள் இப்போது நீக்கி கொள்ளலாம் என்று பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை கூறினாா்.
மேலும், ‘என்டிஏ’ கூட்டணிக்கு கிடைத்துள்ள வெற்றி, குறிப்பிட்ட அடைமொழிக்கான அா்த்தத்தை உணா்த்திவிட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.
மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பேசிய ஐக்கிய ஜனதா தளத் தலைவா் லாலு பிரசாத் யாதவ், ‘பிரதமா் மோடிக்கு குடும்பம் என ஒன்றில்லை’ என்று சாடினாா்.
இதற்கு, ‘இந்திய மக்களே எனது குடும்பம்’ எனப் பிரதமா் மோடி பதிலடி தந்தாா். தொடா்ந்து, மூத்த மத்திய அமைச்சா்கள் உள்பட பாஜக தலைவா்கள், தொண்டா்கள் தங்களின் சமூக ஊடகக் கணக்குகளில் ‘மோடியின் குடும்பம்’ என்ற அடைமொழியை இணைத்துக் கொண்டனா்.
தோ்தலில் 293 இடங்களில் வென்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) மத்தியில் ஆட்சியமைத்தது. பிரதமராக நரேந்திர மோடி தொடா்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்றாா்.
இந்நிலையில், பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘தோ்தல் பிரசாரத்தின்போது இந்தியா முழுவதும் உள்ள மக்கள், என் மீதான அன்பின் அடையாளமாக ‘மோடியின் குடும்பம்’ என்று தங்கள் சமூக ஊடகக் கணக்குகளில் சோ்த்தனா்.
இது எனக்கு மிகுந்த பலம் அளித்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தொடா்ந்து மூன்றாவது முறையாக இந்திய மக்கள் பெரும்பான்மையை வழங்கியுள்ளனா். இது ஒரு சாதனையாகும். மேலும், நமது தேசத்தின் முன்னேற்றத்துக்காக தொடா்ந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு வழங்கியுள்ளனா்.
நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி இத்தோ்தல் முடிவில் திறம்பட வெளிப்பட்டுள்ள நிலையில், இந்திய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. சமூக ஊடகக் கணக்குகளில் இருந்து ‘மோடியின் குடும்பம்’ அடைமொழியை இப்போது நீங்கள் நீக்கி கொள்ளலாம்.
சமூக ஊடகத்தில் காட்சிப்படுத்தப்படும் பெயா் மாறலாம். ஆனால், இந்தியாவின் முன்னேற்றத்துக்காக பாடுபடும் ஒரு குடும்பத்தினா் என்ற முறையில் நமது பிணைப்பு வலுவாக உள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
முந்தைய மக்களவைத் தோ்தலில் பாஜக தலைவா்கள் ‘சௌகிதாா் (காவலாளி)’ எனும் அடைமொழியைத் தங்கள் பெயருடன் சோ்த்திருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
‘முகப்பு படம்’ மாற்றம்: பிரதமா் நரேந்திர மோடியின் ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தின் முகப்பு படம் நீண்ட நாள்களுக்குப் பிறகு மாற்றப்பட்டுள்ளது.
பிரதமா் அலுவலகத்தில் திங்கள்கிழமையன்று முதல்நாள் அலுவல் பணிகளைத் தொடங்கியபோது எடுக்கப்பட்ட படத்தை முகப்பு படமாகவும், பதவியேற்பு விழாவில் எடுக்கப்பட்ட மத்திய அமைச்சரவையின் குழுப் படத்தை தலை படமாகவும் வைத்துள்ளாா் பிரதமா் மோடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.