ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள், பயங்கரவாதிகள் இடையே புதன்கிழமை இரவு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு வீரர் காயமடைந்தார்.
கடந்த 4 நாள்களில் ரெய்சி, கதுவா மற்றும் தோடா பகுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பொதுமக்கள், ஒரு சிஆர்பிஎஃப் வீரர் பலியாகியுள்ளனர். இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், 41 பொதுமக்கள், 6 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து, ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் ராணுவ வீரர்கள், சிறப்புப் படை காவலர்கள் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், தோடா மாவட்டம் காண்டோ பகுதியில் பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படை வீரர்கள் இடையே புதன்கிழமை இரவு 8.20 மணியளவில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
பயங்கரவாதிகள் சுட்டதில் சிறப்புக் காவலர் ஃபரித் அகமது என்பவர் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றதில் இருந்து தொடர்ந்து ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று வருவதால், ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பிரதமராக மோடி பதவியேற்ற நேரத்தில், ரெய்சி பகுதியில் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், பேருந்து பள்ளத்தில் விழுந்து 9 பேர் பலியாகினர், 41 பேர் காயமடைந்தனர்.
தொடர்ந்து, கதுவா மாவட்டத்தில் குடியிருப்பின் மீதும், தோடா பகுதியில் பாதுகாப்புப் படையினரின் சோதனைச் சாவடியை குறிவைத்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 வீரர்கள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.