'ஆணவ' விமர்சனம்: ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் அடித்த யு டர்ன்!
'ஆணவ' விமர்சனத்துக்கு ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் கொடுத்த விளக்கம்
ராமரை வணங்குபவர்களுக்கு ஆணவம் வந்துவிட்டதால், அவர்களின் வெற்றியை 241 ஆக ராமர் குறைவிட்டதாகக் கூறிய ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்தரேஷ் குமார், தான் அவ்வாறு சொல்லவில்லை என்று ஒரு மிகப்பெரிய யு டர்ன் அடித்திருக்கிறார்.
அதாவது, தான் கூறியதன் அர்த்தம் என்னவென்றால், நடந்து முடிந்த தேர்தலில், ராமரை எதிர்த்தவர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள், ராமரை வழிபட்டவர்கள், ஆட்சிக்கு மீண்டும் வந்திருக்கிறார்கள் என்று கூறியதாக வியாழக்கிழமை சொன்ன விமர்சனத்துக்கு இன்று விளக்கம் கொடுத்துள்ளார்.
"ராமரை வணங்கிய கட்சிக்கு படிப்படியாக ஆணவம் வந்ததால், அவர்களின் வெற்றி 241-ஆக குறைந்துவிட்டது. நாட்டிலேயே, தனிப் பெரும் கட்சியாக இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு தேவையான வெற்றி கடவுளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், ராமர் நம்பிக்கை இல்லாமல் எதிர்த்தவர்களுக்கு ஆட்சி கிடைக்கவில்லை. அவர்கள் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தும் 234 இடங்கள் மட்டுமே கிடைத்தது. அவர்கள் அனைவரும் இணைந்தும் இரண்டாம் இடம்தான் பெற முடிந்தது என்று வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.
ஆர்எஸ்எஸ் மூத்த தலைவரின் இந்தக் கருத்தால் நேற்று ஆர்எஸ்எஸ் - பாஜக இடையே மிகப்பெரிய சர்ச்சை வெடித்த நிலையில், இன்று தனது நிலைப்பாட்டை அவர் வேறுவகையில் விளக்கியிருக்கிறார்.
அதாவது, தற்போது நாட்டு மக்களின் மனநிலை எவ்வாறு இருக்கிறது என்பது தெளிவாகிறது, ராமரை யார் எதிர்த்தார்களோ அவர்கள் தற்போது அதிகாரத்தில் இல்லை, ஆனால், ராமர் கோயிலை எழுப்பி அவரைக் கொண்டாடியவர்களுக்குத்தான் ஆட்சி கிடைத்திருக்கிறது, மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றுள்ளார் என்று நேற்று கூறியதாக அவர் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
இவரது கருத்துக்கு மத்திய இணையமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி பதிலளிக்கையில், இதனை வைத்து அவர் நிம்மதியாக இருக்கட்டும், கடவுள் ராமர், எங்களை பணியாற்றுமாறு பணித்திருக்கிறார். நாங்கள் மக்களுக்காக பணியாற்றுகிறோம், இதனை யார் சொல்கிறார்களோ அவர்கள் ஒரு முறை அவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்று இந்திரேஷ் குமாருக்கு பதில் கொடுத்துள்ளார்.
ஜெய்ப்பூரில் வியாழக்கிழமை பேசிய இந்தரேஷ் குமார், கடவுள் ராமர் மீது பக்தி செலுத்தியவர்களுக்கு படிப்படியாக ஆணவம் வந்துவிட்டது, அந்தக் கட்சிதான் தனிப்பெரும் கட்சியாக உள்ளது, ஆனால், அதன் வெற்றியை ராமர் 241க்குள் சுருக்கிவிட்டார், அதன் ஆணவத்தால் என்று கூறியிருக்கிறார்.