மேற்கு வங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம்!
மேற்கு வங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின், டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி அருகே கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதி இன்று (ஜூன் 17) விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் பல தடம்புரண்டன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் லோகோ பைலட் உள்பட 9 பேர் பலியானதாகவும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தளப் பதிவில், “மேற்கு வங்க ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.