தாணே: பாலியல் வழக்கில் மருத்துவரின் ஜாமீன் மனு நிராகரிப்பு!
திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி, ஏமாற்றிய மருத்துவர் கைது
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மருத்துவரின் ஜாமீன் மனுவை, தாணே நீதிமன்றம் நிராகரித்தது.
மும்பையின் தாணே நகரில் மருத்துவர் ஒருவர், 27 வயதான பெண்ணுடன் நட்பில் இருந்துள்ளார். பின்னர், அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறியுள்ளார். அந்தப் பெண்ணும் மருத்துவர் மீது நம்பிக்கை வைத்திருந்தார் என்று தெரிகிறது.
பின்வந்த காலங்களில், அந்தப் பெண்ணுடன் மருத்துவர் பாலியல் உறவும் வைத்துள்ளார். அதனை, மொபைலில் விடியோவும் எடுத்து வைத்திருக்கிறார். அந்தப் பெண், மருத்துவரை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியிருக்கிறார். ஆனால், மருத்துவர் அந்தப் பெண்ணின் வற்புறுத்தலை மறுத்துள்ளார். அதுமட்டுமின்றி, இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்களினையும், விடியோவையும் வெளியிடப் போவதாக மிரட்டியும் உள்ளார்.
மருத்துவரின் இந்த செயல்பாட்டினால், ஏமாற்றமடைந்த பெண் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், மருத்துவர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் குற்றவியல் மிரட்டல் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்பின்னர், மே 7ஆம் தேதியில் மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து, மருத்துவர் ஜாமீன் வழங்குமாறு நீதிமன்றத்திடம் மனு அளித்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், ”வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும்போது, ஜாமீன் வழங்கப்பட்டால், ஆதாரங்களை சேதப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மேலும், மொபைல் போனை ஆராய்ந்தபோது, திருமணம் செய்துகொள்வதாகக் கூறிய பொய்யான வாக்குறுதிகளின் ஆடியோ பதிவுகளும், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களும் தெளிவாகக் கிடைத்துள்ளன.
மேலும், வழக்கின் உண்மைத் தன்மையைப் பார்க்கும்போது, குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன் வழங்கத் தகுதியானவரா என்றும் பார்க்க வேண்டும்” என்று கூறி மருத்துவரின் ஜாமீன் மனுவை நிராகரித்து விட்டது.