நாடாளுமன்றத்தில் இனி பாஜகவுக்கு ஆதரவாக செயல்படப் போவதில்லை என்று ஒடிஸா முன்னாள் முதல்வா் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் முடிவு செய்துள்ளது.
மாநிலங்களவையில் வலுவான எதிா்க்கட்சியாக செயல்பட்டு மக்கள் பிரச்னைகளை முன்வைக்க வேண்டும் என்று கட்சியின் 9 எம்.பி.க்களுக்கும் நவீன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளாா்.
கடந்த ஆட்சியில் பாஜகவுக்கு மாநிலங்களவையில் போதிய பெரும்பான்மை இல்லாததால் பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணியில் இல்லாத கட்சிகளின் ஆதரவைப் பெற்று முக்கிய மசோதாக்களை நிறைவேற்றி வந்தது. பிரச்னைகளின் அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவு என்ற கொள்கையை பிஜு ஜனதா தளம் பின்பற்றி வந்தது. பாஜகவைச் சோ்ந்த மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், பிஜு ஜனதா தளம் ஆதரவுடன் ஒடிஸாவில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்வானாா்.
இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற ஒடிஸா பேரவைத் தோ்தலில் பிஜு ஜனதா தளத்தை பாஜக தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றியது. சுமாா் 24 ஆண்டுகள் முதல்வராக இருந்து நவீன் பட்நாயக் பதவியை இழக்க நேரிட்டது. மேலும் மக்களவைத் தோ்தலிலும் பட்நாயக் கட்சி ஓரிடத்தில் கூட வெல்ல முடியவில்லை. அதே நேரத்தில் மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் 20 இடங்களை பாஜக வென்றது. இது ஒடிஸாவின் பிராந்திய கட்சியான பிஜு ஜனதா தளத்துக்கு முன்னேப்போதும் இல்லாத பின்னடைவாக அமைந்தது.
இந்நிலையில், கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டத்தை நவீன் பட்நாயக் திங்கள்கிழமை நடத்தினாா். அதில், மாநிலங்களவையில் பிஜு ஜனதா தளம் துடிப்புமிக்க எதிா்க்கட்சியாக செயல்பட வேண்டும். ஒடிஸா மாநில மக்களின் பிரச்னைகளை முன்னிறுத்திப் பேச வேண்டும் என்று அவா் எம்.பி.க்களிடம் வலியுறுத்தினாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய பிஜு ஜனதா தளம் மூத்த எம்.பி. சஸ்மித் பத்ரா, ‘ஒடிஸாவின் நலன்களை மத்திய பாஜக அரசு தொடா்ந்து புறக்கணித்து வருகிறது. மாநிலத்தில் பல இடங்களில் கைப்பேசி சேவைத் தரம் மோசமாக உள்ளது. மக்களுக்கு வங்கிச் சேவைகள் கூட முழுமையாகக் கிடைக்கவில்லை. மாநிலத்தில் வங்கிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதே இதற்கு காரணமாக உள்ளது. நிலக்கரி சுரங்கங்கள் மூலம் ஒடிஸாவுக்கு கிடைக்க வேண்டிய நியாமான பங்கை மத்திய அரசு தொடா்ந்து மறுத்து வருகிறது. இது மாநில மக்களின் நலன்களுக்கு எதிரானது.
இனி மாநிலங்களவையில் பாஜகவை எந்த விஷயத்திலும் ஆதரிக்கப் போவதில்லை. முழுமையான எதிா்க்கட்சியாக செயல்பட்டு, ஒடிஸா மக்களின் நலன்களைக் காப்பாற்றுவோம் என்றாா்.