ஜார்க்கண்டில் பாஜக முற்றிலும் துடைத்தெறியப்படும்: ஹேமந்த் சோரன்
மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த பாஜக திட்டமிட்டு வருவதாகக் குறிப்பிட்டார் சோரன்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து பாஜக முற்றிலுமாக துடைத்தெறியப்படும் என முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று (ஜூன் 29) தெரிவித்தார்.
சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனைத் தொடர்ந்து அவர் நேற்று (ஜூன் 28) சிறையிலிருந்து விடுதலையானார்.
இதனிடையே ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தொண்டர்களை தனது இல்லத்தில் இன்று சந்தித்தார்.
Advertisement
அப்போது பேசிய அவர், சதித்திட்டம் தீட்டி தன்னை சிறையில் அடைத்த பாஜகவினரை ஜார்க்கண்ட் மக்கள் விட்டுவைக்க மாட்டார்கள். பாஜகவுக்கு இறுதிக்காலம் நெருங்கிவிட்டது. அடுத்தடுத்து வரும் நாள்களில் பாஜக மாநிலத்திலிருந்து துடைத்தெறியப்படும்.
மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த அவர்கள் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வருகின்றன. அவர்கள் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்தட்டும். ஜார்க்கண்ட் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்னும் பாஜகவின் கனவு கனவாகவே மாறும். மாநில முதல்வராக பழங்குடியைச் சேர்ந்தவரை பாஜக முன்னிருத்தினாலும், அவர்கள் கைப்பாவையாகவே உள்ளனர்.
நாட்டின் சமூக கட்டமைப்பை சீர்குலைப்பதில் நிபுணத்துவம் வாய்ந்தது பாஜக. சாதி, இனம், மதம், ஏழை, பணக்காரன் என மக்களை பிளவுபடுத்தியுள்ளது என விமர்சித்தார் சோரன்.