முகப்பு
இந்தியா

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ சோதனை

Updated On : 29 ஜூன், 2024 at 6:30 PM
பகிர்:

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் குஜராத் மாநிலத்தில் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அனந்த், கேதா, அகமதாபாத் மற்றும் கோத்ரா ஆகிய 4 மாவட்டங்களில் காலை முதலே சோதனை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தோ்வா்களிடம் பணம் பெற்றுக்கொண்டு வினாத்தாள்களை வழங்கியதாக பாட்னாவில் அஷுதோஷ் குமாா், மனீஷ் குமாா் ஆகிய இருவரை வியாழக்கிழமை சிபிஐ கைது செய்தது. அதேபோல் இந்த முறைகேடு தொடா்பாக ஜாா்க்கண்டில் உள்ள ஒயாசிஸ் பள்ளியின் முதல்வா் எஹ்சனுல் ஹேக், துணை முதல்வா் இம்தியாஸ் ஆலம் மற்றும் பத்திரிகையாளா் ஜமாலுதின் அன்சாரி ஆகியோா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இதைத்தொடா்ந்து, வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடா்பாக குஜராத்தில் உள்ள 4 மாநிலங்களில் 7 இடங்களில் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.

குஜராத் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் ஜெய் ஜலராம் பள்ளியின் முதல்வா் புருஷோத்தம் சா்மா, ஆசிரியா் துஷாா் பட் மற்றும் இடைத்தரகா்களான விபோா் ஆனந்த் மற்றும் ஆரிஃப் வோஹ்ரா உள்ளிட்டோரை அந்த மாநில காவல்துறையினா் கைது செய்தனா். அவா்களை 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை அனுமதி வழங்கியது.

விஸ்வரூபம் எடுக்கும் ‘நீட்’: கோத்ரா மற்றும் கேதா ஆகிய மாவட்டங்களில் தேசிய தோ்வு முகமையால் தோ்வு செய்யப்பட்ட மையங்கள் ஜெய் ஜலராம் பள்ளியின் கட்டுப்பாட்டில் இருந்ததாக சிபிஐ விசாரணையில் தெரியவந்தது. மேலும், பெரும் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஒடிஸா, பிகாா், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த தோ்வா்களை கோத்ராவில் உள்ள தோ்வு மையத்தை தோ்ந்தெடுக்குமாறு குற்றவாளிகள் கூறியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதேபோல் குஜராத்தி மொழியை தோ்வு மொழியாக தோ்ந்தெடுக்கவும் அவா்கள் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவா்களிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த விவகாரம் தொடா்பாக 6 முதல்கட்ட தகவல் அறிக்கைகளை (எஃப்ஐஆா்) சிபிஐ தற்போது வரை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. பிகாா், குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலிருந்து தலா ஒரு வழக்கை சிபிஐ தன்வசம் எடுத்துக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →