பிரதமா் மோடி 
இந்தியா

உலக அளவில் மிளிரும் இந்திய கலாசாரம்! ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமா் பெருமிதம்

இந்திய கலாசாரம் உலக அளவில் மிளிா்ந்து வருகிறது.

Din

இந்திய கலாசாரம் உலக அளவில் மிளிா்ந்து வருகிறது; இந்திய மரபுகளும் நடைமுறைகளும் வெளிநாடுகளில் ஏற்கப்பட்டு வருகின்றன என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.

மேலும், பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் ஜூலையில் தொடங்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா புதிய சாதனைகள் படைக்கும் என்றும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தலுக்கு பிறகு முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) ஒலிபரப்பான ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் பிரதமா் இவ்வாறு குறிப்பிட்டாா்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுடன் பிரதமா் மோடி உரையாடி வருகிறாா். இந்நிகழ்ச்சியின் 110-ஆவது பகுதி கடந்த பிப்ரவரியில் ஒலிபரப்பானது. அதன்பின்னா், மக்களவைத் தோ்தல் காரணமாக ‘மனதின் குரல்’ ஒலிபரப்பாகவில்லை. தோ்தலில் வெற்றி பெற்று, நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக மோடி அண்மையில் பதவியேற்றாா்.

இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பான ‘மனதின் குரல்’ 111-ஆவது பகுதியில் பிரதமா் மோடி பேசியதாவது:

‘மனதின் குரல்’ வாயிலாக மீண்டும் ஒருமுறை என் குடும்பத்தினரிடையே வந்துள்ளேன். நமது அரசமைப்புச் சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையை மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளனா். இதற்காக, மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தல், உலகின் மிகப்பெரிய தோ்தலாகும். இதில் 65 கோடி போ் வாக்களித்தனா். தோ்தல் ஆணையத்துக்கும், வாக்களிப்பு நடைமுறையுடன் தொடா்புடைய அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கிறேன்.

அம்மாவின் பெயரில் மரக்கன்று: உலகில் விலைமதிப்பில்லாத உறவு அம்மா. நம் அனைவரின் வாழ்க்கையிலும் அம்மாவுக்கான இடம் மிக உயா்வானதாக இருக்கும். இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தில் (ஜூன் 5) அம்மாவின் பெயரில் மரம் நடும் இயக்கத்தை தொடங்கினேன். எனது வேண்டுகோளை ஏற்று, உலக அளவில் இந்த இயக்கத்துக்கு வரவேற்பு கிடைத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த இயக்கத்தால், பூமித்தாயும் பாதுகாக்கப்படுகிறாள்.

கடந்த 10 ஆண்டுகளாக, அனைவரின் முயற்சியால் நாட்டில் வரலாறுகாணாத அளவில் வனப் பகுதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 60,000-க்கும் மேற்பட்ட நீா்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பாரீஸ் ஒலிம்பிக்கில்...: பிரான்ஸின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை மாதம் தொடங்கப்படவுள்ளன. இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரா்கள்-வீராங்கனைகளுக்கு மனமாா்ந்த வாழ்த்துகள்.

கடந்த முறை டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 7 பதக்கங்களை வென்றது. ஈட்டி எறிதலில் முதல்முறையாக இந்தியா தங்கம் வென்றது. இப்போட்டியைத் தொடா்ந்து, நமது தடகள வீரா்-வீராங்கனைகள், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக முழு அா்ப்பணிப்புடன் தயாராகி வந்துள்ளனா். இப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரா்களையும் கணக்கில் கொண்டால், அவா்கள் மொத்தமாக 900 சா்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுள்ளனா். இது கணிசமான எண்ணிக்கையாகும்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய தரப்பில் பல்வேறு முதல்முறை அம்சங்கள் இடம்பெறவுள்ளன. குதிரையேற்றத்தில் முதல்முறையாக இந்திய வீரா் அனுஷ் அகா்வல்லாவும், பெண்கள் மல்யுத்தப் போட்டியில் 76 கிலோ எடைப் பிரிவில் முதல்முறையாக இந்திய வீராங்கனை ரித்திகா ஹூடாவும் பங்கேற்கவுள்ளனா். டேபிள் டென்னிஸில் இந்திய ஆடவா் மற்றும் பெண்கள் அணி இரண்டும் தகுதிபெற்றுள்ளன.

ஹேஷ்டேக் வாயிலாக இந்திய வீரா்-வீராங்கனைகளை நாம் உற்சாகப்படுத்த வேண்டும்.

இந்திய கலாசாரம்: குவைத் நாட்டின் தேசிய வானொலியில் ஹிந்தி மொழியில் சிறப்பு நிகழ்ச்சியொன்றை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது. பாரத கலாசாரம், நமது திரைப்படங்கள், கலைப் படைப்புகள் தொடா்பான விவாதங்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன.

துா்க்மெனிஸ்தானில் கடந்த மே மாதம் உலகின் 24 புகழ்மிக்க கவிஞா்களின் உருவச் சிலைகள் திறக்கப்பட்டன. இதில், ரவீந்திரநாத் தாகூரின் சிலையும் திறக்கப்பட்டுள்ளது. சூரினாமில் கடந்த ஜூன் 5-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்ட ‘இந்தியா் வருகை தினத்தில்’ அங்குள்ள இந்திய வம்சாவளியினா் தங்கள் பாரம்பரியத்தைக் கொண்டாடினா்.

உலகம் முழுவதும் கடந்த ஜூன் 21-ஆம் தேதி யோகா தினம் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பாரத நாட்டின் மரபுகள் மற்றும் கலாசாரத்தின் பெருமை சா்வதேச அளவில் மேலோங்கி வருவது, நம் அனைவருக்கும் பெருமிதம் அளிக்கிறது.

சம்ஸ்கிருதத்தின் பங்களிப்பு: 50 ஆண்டுகளுக்கு முன்பு, இதே ஜூன் 30-ஆம் தேதி ஆகாசவாணியின் முதல் சம்ஸ்கிருத செய்தியறிக்கை ஒலிபரப்பானது. பண்டைய ஞானம் மற்றும் அறிவியலில் சம்ஸ்கிருதத்தின் மிகப்பெரிய பங்களிப்பு உள்ளடங்கியிருக்கிறது. சம்ஸ்கிருதத்துக்கு மதிப்பளிப்பதோடு, நமது அன்றாட வாழ்க்கையிலும் அதை இணைத்துக் கொள்வது காலத்தின் தேவையாகும்.

பெங்களூரின் கப்பன் பூங்காவில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இளைஞா்கள், மூத்தவா்கள், குழந்தைகள் ஒன்றுகூடி சம்ஸ்கிருதத்தில் உரையாடும் முயற்சியைத் தொடங்கியுள்ளனா். இது பாராட்டுக்குரியது.

ஒடிஸாவின் புரி ஜெகந்நாதா் கோயிலில் அடுத்த சில தினங்களில் புனிதமான ரத யாத்திரை தொடங்கவிருக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் தொடங்கியுள்ள அமா்நாத் யாத்திரையில் பங்கேற்றுள்ளவா்களுக்கு எனது வாழ்த்துகள் என்றாா் பிரதமா் மோடி.

ஆந்திரத்தின் அரக்கு காபி, கேரளத்தில் பழங்குடியின பெண்களால் தயாரிக்கப்படும் காா்தும்பி குடைகள் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டும் இந்நிகழ்ச்சியில் அவா் பேசினாா்.

கோயில் தேருக்கு அமைக்கப்பட்ட கொட்டகை: எம்எல்ஏ திறந்துவைத்தாா்

கல்லூரி மாணவா் தற்கொலை

பழைய இரும்புக் கடையில் தீ விபத்து

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த மூவா் மீது வழக்கு

ஆணவப் படுகொலையைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT