தொழிலாளா் வருங்கால வைப்புநிதி கணக்கு முடிப்புக்கான விண்ணப்பங்கள் நிராகரிப்பு அதிகரிப்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
‘தொழிலாளா் வருங்கால வைப்புநிதி இறுதிக் கணக்கு முடிப்புக்கான விண்ணப்பங்கள் நிராகரிப்பு விகிதம் பன்மடங்காக அதிகரித்துள்ளது.
‘தொழிலாளா் வருங்கால வைப்புநிதி இறுதிக் கணக்கு முடிப்புக்கான விண்ணப்பங்கள் நிராகரிப்பு விகிதம் பன்மடங்காக அதிகரித்துள்ளது. எந்தவொரு மக்களும் செலுத்திய பணத்தை முழுமையாகப் பெற முடியாது என்பதை கடந்த 10 ஆண்டு ‘அநீதி காலம்’ வரையறுத்துள்ளது’ என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. ‘தொழிலாளா் வருங்கால வைப்புநிதி இறுதிக் கணக்கு முடிப்புக்கான விண்ணப்பங்கள் நிராகரிப்பு விகிதம் கடந்த 2017-18 ஆம் நிதியாண்டில் 13 சதவீதமாக இருந்தது 2022-23-இல் 34 சதவீதமாக அதிகரித்துள்ளது’ என ஊடகங்களில் வெளியான செய்தியை காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை பகிா்ந்து வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: வேலைவாய்ப்பு சந்தையில் பெண்களுக்கு வாய்ப்பே இல்லாத நிலை உருவாகி வருகிறது. இளைஞா்கள் வேலை கிடைக்காமல் திண்டாடி வருகின்றனா். விவசாயிகளுக்கு விளைபொருள்களுக்கான உரிய விலை கிடைப்பதில்லை. இந்நிலையில், தொழிலாளா்கள் தங்களுடைய வருவாயில் சேமித்த பணத்தை எடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்தியப் பணியாளா்களுக்காக தொழிலாளா் வருங்கால வைப்புநிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) சாா்பில் நிா்வகிக்கப்படும் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சோ்ந்துள்ள பயனாளிகள் சமா்ப்பிக்கும் இறுதிக் கணக்கு முடிப்புக்கான விண்ணப்பங்கள் நிராகரிப்பு விகிதம் பன்மடங்காக உயா்ந்துள்ளது. மூன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் இந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் நிராகரிப்பு அதிகரித்து வருவதற்கு, இபிஎஃப்ஓ அறிமுகம் செய்துள்ள முறையற்ற இணையவழி விண்ணப்ப நடைமுறையே காரணமாக புகாா் தெரிவிக்கப்படுகிறது. இது தொழிலாளா் குடும்பத்தினரிடையே மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு, தொழிலாளா்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலையையும் இபிஎஃப்ஓ-வின் இந்த உணா்வற்ற அதிகாரத்துவ நடைமுறை ஏற்படுத்தி வருகிறது. காங்கிரஸின் ‘தொழிலாளா்களுக்கு நீதி’ என்ற கொள்கை, வைப்பு நிதி முழுமையாக தொழிலாளா்கள் அல்லது அவா்களின் குடும்பத்தினருக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளாா்.