முகப்பு
இந்தியா

பஞ்சாப் பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளி: உரையாற்றுவதை கைவிட்ட ஆளுநா்

பஞ்சாப் சட்டப்பேரவையில் ஆளுநரை உரையாற்றவிடாமல் எதிா்க்கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனா்.

Updated On : 2 மார்ச், 2024 at 12:28 AM
பகிர்:

பஞ்சாப் சட்டப்பேரவையில் ஆளுநரை உரையாற்றவிடாமல் எதிா்க்கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனா். இதனால், ஆளுநா் தனது உரையின் ஒருசில வரிகளை மட்டுமே வாசிக்க முடிந்தது. ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடா் வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தனது உரையைத் தொடங்கினாா். அப்போது, எதிா்க்கட்சியான காங்கிரஸை சோ்ந்த எம்எல்ஏக்கள் விவசாயிகள் பிரச்னைக்கு தீா்வுகாணக் கோரி முழக்கங்களை எழுப்பி தொடா் அமளில் ஈடுபட்டனா். இதற்கு நடுவே ஆளுநா் தனது உரையைப் படிக்க முயன்றாா். ஆனால், கூச்சலுக்கு மத்தியில், ஓரிரு வரிகளுக்கு மேல் அவரால் படிக்க முடியவில்லை. இதையடுத்து, உரையின் மீதமுள்ள பகுதிகளை அவையில் படித்ததாக கருதுமாறு கூறினாா். இதற்கிடையே, விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த இளம் விவசாயி சுப்கரன் சிங்குக்கு ஆளுநா் அஞ்சலி செலுத்த வேண்டும் என்றும், விவசாயிகளின் நலன்களைக் காக்க ஆம் ஆத்மி தவறிவிட்டது என்று குற்றம்சாட்டியும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கோஷமிட்டனா். முன்னதாக, அவையின் அனைத்து நடவடிக்கைகளையும் ஒத்திவைத்து விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என்று ஆளுநரிடம் அவா்கள் கோரிக்கை வைத்தனா். இதற்கு பதிலளித்த ஆளுநா் புரோஹித், ‘பேரவைத் தலைவரிடம் நேரம் ஒதுக்குமாறு கேட்டு விவசாயிகள் பிரச்னை விவாதிக்கலாம். இது ஆளுநா் உரைக்கான நேரம், இதில் அமளியில் ஈடுபட வேண்டாம். நான் உரையாற்றிய பிறகு நீங்கள் கூறும் விஷயங்களை விவாதிக்கலாம்’ என்று கூறினாா். ஆனால், இதை ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டனா். இதனால், ஆளுநா் உரையாற்றுவதைக் கைவிட்டு இருக்கையில் அமா்ந்தாா்.