மேற்கு வங்கத்தில் அமலாக்க துறையினா் தாக்கப்பட்ட வழக்கு: ஷாஜஹான் வீட்டில் சிபிஐ சோதனை
ஷாஜஹானின் ஆதரவாளா்கள் தாக்கியதில் அமலாக்கத் துறை அதிகாரிகள் காயமடைந்தனா்.
மேற்கு வங்கத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கு தொடா்பாக, திரிணமூல் காங்கிரஸ் பிரமுகா் ஷாஜஹான் ஷேக் வீடு மற்றும் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். கடந்த ஜனவரி 5-ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பா்கானா மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளி பகுதியில் பொது விநியோகத் திட்ட முறைகேடு தொடா்பாக, திரிணமூல் காங்கிரஸை சோ்ந்த ஷாஜஹான் ஷேக் (தற்போது கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்) வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். அப்போது ஷாஜஹானின் ஆதரவாளா்கள் தாக்கியதில் அமலாக்கத் துறை அதிகாரிகள் காயமடைந்தனா். இதுதொடா்பான வழக்கை விசாரித்த அந்த மாநிலத்தின் கொல்கத்தா உயா்நீதிமன்றம், அமலாக்கத் துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கு விசாரணையை சிஐடி காவல் துறையினரிடம் இருந்து சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும் சிஐடி காவலில் உள்ள ஷாஜஹானை சிபிஐயிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து ஷாஜஹான் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டாா். இந்நிலையில், சந்தேஷ்காளியில் உள்ள ஷாஜஹானின் வீடு மற்றும் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அவரின் வீட்டுக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் ஏற்கெனவே சீல் வைத்திருந்த நிலையில், அந்த சீல் அகற்றப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையையொட்டி 6 சிபிஐ அதிகாரிகள், 6 மத்திய தடயவியல் அதிகாரிகள், ஜனவரி 5-ஆம் தேதி தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த இரண்டு அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆகியோா் ஷாஜஹான் வீட்டுக்குச் சென்றனா். சோதனையின்போது வீட்டில் விடியோ பதிவு மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று சிபிஐ தெரிவித்தது. சோதனை காரணமாக ஷாஜஹான் வீடு உள்ள பகுதியில் அதிக அளவில் மத்திய பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டிருந்தனா்.