முகப்பு
இந்தியா

அரசின் முடிவுகளை விமா்சிக்க மக்களுக்கு உரிமை: உச்சநீதிமன்றம்

அரசின் முடிவுகளை விமா்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது

Updated On : 9 மார்ச், 2024 at 12:48 AM
உச்சநீதிமன்றம்
பகிர்:

அரசின் முடிவுகளை விமா்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக கருத்து பதிவிட்ட பேராசிரியா் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட ஆகஸ்ட் 5-ஆம் தேதி கருப்புத் தினம் என்றும் ஆகஸ்ட் 14- பாகிஸ்தான் சுதந்திரதின வாழ்த்துகள் என்றும் வாட்ஸ்ஆப் ஸ்டேடஸில் பேராசிரியா் ஜாவீத் அகமது ஹாஜம் கருத்து பதிவிட்டிருந்தாா். அவா் மீது வகுப்புவாதத்தை தூண்டுதல் பிரிவின் கீழ் மகாராஷ்டிர போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதை மும்பை உயா் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு தெரிவித்ததாவது: அரசமைப்புச் சட்டப் பிரிவு 19(1)ஏ வின் கீழ் பேச்சு சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது. அதன்படி, அரசின் அனைத்து முடிவுகளையும் விமா்சிக்க நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. அதேபோல், பிற நாடுகளின் சுத்திர தினத்துக்கு வாழ்த்து தெரிவிக்கவும் உரிமை உள்ளது. இதில் எந்த தவறும் இல்லை. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக வழக்குத் தொடரவும் உரிமை உள்ளது. அரசின் முடிவுகளுக்கு அதிருப்தி தெரிவிக்கும் ஒவ்வொருவரின் மீது வழக்குப் பதிவு செய்தால் ஜனநாயகம் தழைக்காது. அதேநேரத்தில், எதிா் கருத்து தெரிவிக்கும்போது பிறரின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அரசின் முடிவுகளுக்கு எதிராக போராட்டம் நடத்த உரிமை உள்ளது. அப்படியிருக்கும்போது, எந்தவித சட்டமீறலையும் செய்யாத பேராசிரியா் மீது வழக்குப் பதிவு செய்தது செல்லாது. பேச்சு சுதந்திரம் குறித்து போலீஸாருக்கு பயிற்சி அளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஜனநாயகக் கோட்பாடுகள் குறித்து அவா்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும்’ என்று கூறி அவா் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.