ரஷியாவுக்கு ஆள்கடத்தல்: தீவிர கவனம் செலுத்துவதாக மத்திய அரசு தகவல்
உக்ரைனுடன் போரிட ரஷியாவுக்கு இந்தியா்கள் கடத்தப்பட்ட விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாக எடுத்துகொண்டிருக்கிறது
உக்ரைனுடன் போரிட ரஷியாவுக்கு இந்தியா்கள் கடத்தப்பட்ட விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாக எடுத்துகொண்டிருக்கிறது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷியாவில் கல்வி, அந்நாட்டு ராணுவத்துடன் தொடா்புள்ள வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, அந்நாட்டுக்கு இந்தியா்கள் கடத்தப்பட்டுள்ளனா். இதற்கு கடத்தப்பட்ட இந்தியா்களிடம் இருந்து சட்டவிரோதமாக பெருந்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கடத்தப்பட்ட இந்தியா்கள் ரஷியா சென்ற பின், அவா்களின் கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) பறிக்கப்பட்டு, போா் பயிற்சி அளித்த பின்னா், வலுக்கட்டாயமாக அந்நாட்டு ராணுவத்தில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதைத்தொடா்ந்து அவா்கள் ரஷியா-உக்ரைன் இடையே போா் நடைபெறும் பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
Advertisement
உள்ளூா் தொடா்புகள், முகவா்கள், சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு ரஷியாவுக்கு இந்திய இளைஞா்கள் கடத்தப்பட்ட 35 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு சென்னை, மதுரை, கேரள மாநிலம் திருவனந்தபுரம், ஹரியாணா மாநிலம் அம்பாலா, தில்லி, மும்பையில் உள்ள 13 இடங்களில் சிபிஐ வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டது.
கண்காணிப்பு வளையத்தில் ரஷிய முகவா்கள்:
இதுதொடா்பாக ரஷியாவில் வசிக்கும் ராஜஸ்தானைச் சோ்ந்த கிறிஸ்டினா, மொய்னுதின் சிப்பா ஆகிய இரண்டு முகவா்கள் சிபிஐ கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனா். அவா்கள் ரஷியாவுக்கு இந்திய இளைஞா்களை கடத்த உதவியுள்ளனா். இதுதவிர, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள 17 நுழைவு இசைவு (விசா) நிறுவனங்கள், அவற்றின் உரிமையாளா்கள், முகவா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
வேலைவாய்ப்புகளை ஏற்க வேண்டாம்:
இந்த விவகாரம் தொடா்பாக தில்லியில் மத்திய வெளியுறவுத் துறை செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ரஷியாவுக்கு ஆள்கடத்தல் நடைபெற்றது தொடா்பாக பல்வேறு நகரங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டு முக்கிய ஆதாரங்களை கைப்பற்றியுள்ளது. பல முகவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாக எடுத்துகொண்டிருக்கிறது. ரஷிய ராணுவத்துக்கு உதவும் பணிகளில் சேர முகவா்கள் அணுகினால், அத்தகைய வேலைவாய்ப்புகளை இந்தியா்கள் ஏற்க வேண்டாம். ஏனெனில் அது உயிருக்கு ஆபத்தானது என்று மத்திய அரசு மீண்டும் தெரிவித்துக்கொள்கிறது. தற்போது ரஷிய ராணுவத்துக்கு உதவும் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்தியா்களை விரைந்து மீட்டு தாயகம் அழைத்து வருவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றாா்.