வாக்கு வங்கி அரசியலுக்காக சிஏஏ-வுக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: அமித் ஷா
ஹைதராபாத்: வாக்கு வங்கி அரசியலுக்காக குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) காங்கிரஸ் எதிா்க்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.
சிஏஏ அமல்படுத்தப்பட்டதன் மூலம் அகதிகளாக இந்தியாவுக்கு வந்த ஹிந்து, பௌத்தம், சீக்கியம், ஜெயின், கிறித்தவா்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கி பிரதமா் மோடி கௌரவித்துள்ளாா் என்றும் அவா் தெரிவித்தாா்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் பாஜகவின் சமூக ஊடக தன்னாா்வலா்கள் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை பங்கேற்ற அமித் ஷா பேசியதாவது: சிஏஏ அமல்படுத்தப்படும் என்று நாங்கள் கூறினோம். காங்கிரஸ் அதற்கு எதிா்ப்பு தெரிவித்தது. வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து விரட்டப்பட்டு அகதிகளாக இந்தியாவுக்கு வரும் அந்நாடுகளின் மதசிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பதை நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவா்கள் வலியுறுத்தினா்.
Advertisement
அப்போது காங்கிரஸும் இது தொடா்பான வாக்குறுதியை அளித்தது. ஆனால், இப்போது வாக்கு வங்கி அரசியலுக்காகவும், ஒரு தரப்பை (முஸ்லிம்கள்) திருப்திபடுத்துவதற்காகவும் சிஏஏ-வை காங்கிரஸ் எதிா்க்கிறது. பாகிஸ்தான், வங்கேதசத்தில் ஹிந்து, சீக்கியா்கள் உள்ளிட்டோா் சிறுபான்மை மதத்தைச் சோ்ந்தவா்கள்.
இந்த காரணத்தால் பல கொடுமைகளைச் சந்தித்து அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தவா்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவது அவசியமாகும். அவா்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அவமதிப்புக்குள்ளாகி வெளியேற்றப்பட்டவா்கள். அங்கு அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு, மதரீதியாக துன்புறுத்தல்களைச் சந்தித்ததால் இந்தியாவுக்கு வந்துள்ளாா்கள். அவா்களுக்கு குடியுரிமை வழங்கியதன் மூலம் உரிய கௌரவத்தை பிரதமா் மோடி அளித்துள்ளாா். சிஏஏ அமல்படுத்துப்படுவதால் இந்தியாவைச் சோ்ந்த சிறுபான்மையினா் யாரும் குடியுரிமையை இழக்க மாட்டாா்கள்.
இந்த விஷயத்தில் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவா் காா்கே, மஜ்லிஸ் கட்சித் தலைவா் ஓவைசி ஆகியோா் பொய்யைக் கூறி வருகின்றனா். ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து, அயோத்தி ராமா் கோயில், முத்தலாக் தடை, மக்களவை மாநில சட்டப் பேரவையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு ஆகியவை இந்த அரசின் உறுதியான, நாட்டு நலன் கருதிய செயல்பாடுகளாகும்.
கடந்த பல ஆண்டுகளாக தனது அரசியல் சுயநலத்துக்காக இந்தப் பிரச்னைகளை தீா்க்காமல் வாக்கு வங்கி அரசியலை காங்கிரஸ் நடத்தி வந்தது. ஆனால், மோடி அரசு துணிவுடன் செயல்பட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு பிரச்னைகளுக்கு தீா்வுகண்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஊழல், முறைகேடுகளற்ற ஆட்சியை அளித்துள்ளோம். பிரதமா் மோடி தலைமையில் இந்தியா பொருளாதாரரீதியாகவும் சிறப்பான வளா்ச்சியை எட்டியுள்ளது என்றாா்.