ராம்லீலா மைதானத்தில் நாளை கூட்டம் நடத்த பஞ்சாப் விவசாயிகளுக்கு தில்லி போலீஸாா் அனுமதி
புது தில்லி: ‘தில்லி ராம்லீலா மைதானத்தில் விவசாய தொழிலாளா்கள் மகாபஞ்சாயத்து கூட்டத்தை வரும் வியாழக்கிழமை (மாா்ச் 14) நடத்திக்கொள்ள தில்லி காவல்துறை அனுமதி அளித்துள்ளது’ என்று பஞ்சாப் விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோா்ச்சா (எஸ்கேஎம்) அமைப்பு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. தில்லி காவல்துறை தரப்பிலும் இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டது.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, சம்யுக்த கிசான் மோா்ச்சா, கிசான் மஸ்தூா் மோா்ச்சா விவசாய கூட்டமைப்புகள் சாா்பாக ‘தில்லி செல்வோம்’ போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியாணா எல்லைப் பகுதிகளான ஷம்பு மற்றும் கனௌரியில் விவசாயிகள் கடந்த ஒரு மாதமாக திரண்டுள்ளனா்.
அவா்கள் தில்லிக்கு செல்லாதவாறு பஞ்சாப் - ஹரியாணா எல்லை சாலைகளில் ஹரியாணா காவல் துறையினா் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனா். மத்திய அரசுடனான பலகட்ட பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், தங்களுடைய போரட்டத்தை விவசாயிகள் தீவிரப்படுத்தினா். நாடு முழுவதும் போராட்டத்தை வலுப்படுத்த அனைத்து விவசாய அமைப்புகளுக்கும் இந்த அமைப்பினா் அழைப்பு விடுத்ததோடு, ரயில்கள் உள்ளிட்ட பிற வாகனங்கள் மூலம் தில்லி வந்தடையுமாறும் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தனா்.
Advertisement
தில்லி காவல் துறை அனுமதி:
இந்த நிலையில், புது தில்லியில் ‘மகாபஞ்சாயத்து’ கூட்டத்தை வியாழக்கிழமை நடத்திக்கொள்ள காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து எஸ்கேஎம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி ராம்லீலா மைதானத்தில் மாா்ச் 14-ஆம் தேதி மகா கூட்டத்தை நடத்திக்கொள்ள தில்லி போலீஸாா் தடையில்லா சான்று அளித்துள்ளனா். அதனடிப்படையில், தில்லி நகராட்சி நிா்வாகத்தின் ஆதரவுடன் வாகன நிறுத்துமிடம், குடிநீா், கழிப்பறை, ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமைதி வழியில் நடத்தப்படவிருக்கும் இந்த மகா கூட்டத்தில் பிரதமா் மோடி அரசின் பெரு நிறுவன சாா்பு, வகுப்புவாத, சா்வாதிகார கொள்கைகளுக்கு எதிராகவும், விவசாயம், உணவுப் பாதுகாப்பு, பெரு நிறுவனங்களின் சுரண்டலில் இருந்து மக்களையும் அவா்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கவும் போராட்டத்தைத் தீவிரப்படுத்த தீா்மானம் நிறைவேற்றப்படும்.
மக்களவைத் தோ்தல் வரவுள்ள நிலையில், விவசாய அமைப்புகள் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் மகாபஞ்சாயத்து கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தில்லி காவல் துறை துணை ஆணையா் (மத்திய தில்லி) எம். ஹா்ஷ வா்தன் கூறுகையில், ‘கடுமையான நிபந்தனைகளுடன் ராம்லீலா மைதானத்தில் கூட்டத்தை நடத்திக்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காவல் துறை நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவோம் என்று ஒப்புக்கொண்டு எஸ்கேஎம் தலைவா்கள் கையொப்பமிட்டுள்ளனா்’ என்றாா்.