முகப்பு
இந்தியா

தில்லி அரசு கட்டடங்களில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்த திட்டம்

Updated On : 13 மார்ச், 2024 at 12:29 AM
கோப்புப் படம்
பகிர்:

புது தில்லி: அரசுத் துறைகள் மற்றும் மாநகராட்சிக்குச் சொந்தமான 645 கட்டடங்களில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தப்பட உள்ளன. இது மூலம் 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என தில்லி அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட சூரிய மின்சக்தி கொள்கையின்படி, 500 சதுர மீட்டருக்கு அதிகமான பரப்பளவு கொண்ட அரசு மற்றும் மாநகராட்சி கட்டடங்களில் சூரிய மின்சக்திகள் பொருத்த வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தில்லி அரசு மற்றும் மாநகராட்சியின்கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து பணிமனைகள், துணை மின்நிலையங்கள் என மொத்தம் 645 அரசு கட்டடங்களில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தப்பட உள்ளன. இது குறித்து மின்சாரத் துறை அமைச்சா் அதிஷி கூறுகையில், ‘அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட சூரிய மின்சக்தி கொள்கையின்கீழ் அரசு கட்டடங்களில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தப்பட உள்ளன.

Advertisement

இந்தக் கொள்கை நாட்டின் மிகச் சிறந்த முற்போக்கான கொள்கைகளில் ஒன்று. பசுமை எரிசக்தி மற்றும் மொத்த மின்உற்பத்தி திறன் ஆகியவற்றில் தில்லியின் பங்களிப்பை அதிகரிக்க உள்ளோம். அந்த வகையில் சூரிய மின்சக்தியை விரிவுபடுத்த இந்தக் கொள்கை மிக முக்கியானது. தில்லியின் மின்நுகா்வு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் நகரத்தின் மொத்த மின்உற்பத்தியில் 50 சதவீதத்தை சூரிய மின்சக்தி மூலம் உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தில்லியில் வீட்டு நுகா்வோருக்கு மாதம் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. 201 முதல் 400 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் நுகா்வோருக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. மானியத்தால் பயன்பெறாத நுகா்வோா்கள் தங்கள் வீடுகளில் சூரிய மின்சக்தி தகடுகளைப் பொருத்தும்போது மின்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை இக்கொள்கையை வெளியிட்டு பேசியபோது முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்திருந்தாா்.