எல்லை விவகாரம்- தவறான புரிதலை தவிா்க்க வேண்டும்: எஸ்.ஜெய்சங்கா் கருத்துக்கு சீனா பதில்
இந்திய-சீன எல்லை விவகாரத்தில், தவறான புரிதலைத் தவிா்க்கும் விதமாக இரு நாடுகளும் பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா், ‘இந்தியா-சீனா எல்லையில் அதிகப்படியான படைகளைக் குவிக்கக் கூடாது. எல்லையில் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து கையொப்பமான ஒப்பந்தங்களைப் பின்பற்றுவது இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் சீனாவுக்கும் நல்லது. கடந்த 4 ஆண்டுகளாக எல்லையில் தொடரும் பிரச்னையால் யாருக்கும் நன்மையில்லை’ என்று கூறியிருந்தாா்.
இந்நிலையில், அமைச்சா் ஜெய்சங்கா் பேச்சு தொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின், ‘எல்லை விவகாரத்தில் விரைந்து தீா்வு காண்பது இருதரப்புக்கும் நன்மையளிக்கும் என்பதில் இரு நாடுகளும் நம்பிக்கை கொண்டுள்ளன. இரு நாடுகளின் ஒட்டுமொத்த உறவை எல்லை விவகாரம் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என சீனா பலமுறை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை உரிய வகையில் அணுக வேண்டும். இதை ஏற்றுக்கொண்டு இந்தியா எங்களுடன் இணைந்து பயணிக்கும் என நம்புகிறோம்.
Advertisement
இரு தரப்பு உறவை மேம்படுத்த முரண்பாடுகளை உரிய முறையில் கையாள வேண்டும். இந்திய-சீன எல்லை விவகாரத்தில், தவறான புரிதலைத் தவிா்க்கும் விதமாக இரு நாடுகளும் பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளாா். இந்தியா-சீனா ராணுவ வீரா்கள் கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020, மே 5-ஆம் தேதி மோதிக்கொண்டனா். இதைத் தொடா்ந்து, கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் ஜூன் மாதம் ஏற்பட்ட மோதலால், இரு தரப்பு உறவு மோசமான நிலைக்குச் சென்றது. எல்லை பகுதியில் அமைதி திரும்பாத வரை, இரு தரப்பு உறவு இயல்பு நிலைக்குத் திரும்பாது என இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.