முகப்பு
இந்தியா

போலி துப்பாக்கி உரிம வழக்கு- உ.பி. முன்னாள் எம்எல்ஏ முக்தாா் அன்சாரிக்கு ஆயுள் சிறை

Updated On : 14 மார்ச், 2024 at 1:19 AM
பகிர்:

முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய போலி துப்பாக்கி உரிம வழக்கில், உத்தர பிரதேச முன்னாள் எம்எல்ஏ முக்தாா் அன்சாரிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

உத்தர பிரதேசத்தில் தாதாவாக இருந்து அரசியலில் பிரவேசித்தவா் முக்தாா் அன்சாரி. பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் 2 முறை, சுயேச்சையாக 2 முறை, சொந்தக் கட்சி தொடங்கி ஒரு முறை என மொத்தம் 5 முறை எம்எல்ஏவாக பதவி வகித்தவா். இவா் கடந்த 1987-ஆம் ஆண்டு துப்பாக்கி உரிமம் பெறுவதற்கு உத்தர பிரதேச மாநிலம் காஜிபுா் மாவட்ட மாஜிஸ்திரேட்டை அணுகினாா்.

பின்னா், அப்போதைய மாஜிஸ்திரேட், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஆகியோரின் கையொப்பங்கள் போல போலியாக கையொப்பமிட்டு அன்சாரி துப்பாக்கி உரிமம் பெற்ாகக் கூறப்படுகிறது. இந்த மோசடி தொடா்பாக கடந்த 1990-ஆம் ஆண்டு அன்சாரி மீது சிபிசிஐடி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

Advertisement

இந்த வழக்கு வாரணாசியில் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அன்சாரி மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ரூ. 2 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி அவனீஷ் கெளதம் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

உத்தர பிரதேசம், பஞ்சாப், தில்லி மற்றும் பிற மாநிலங்களில் அன்சாரி மீது சுமாா் 60 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், 7 வழக்குகளில் அவா் குற்றவாளி என்று தீா்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் உத்தர பிரதேச காவல் துறையினா் தெரிவித்துள்ளனா். தற்போது உத்தர பிரதேசத்தில் உள்ள பாந்தா மாவட்ட சிறையில் அன்சாரி அடைக்கப்பட்டுள்ளாா்.