97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவிருக்கிறார்கள்: ராஜீவ் குமார்
97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவிருக்கிறார்கள் என்றார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவிருக்கிறார்கள் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் தேர்தல் ஆணையக அலுவலகத்தில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் புதிதாக தேர்வாக தேர்தல் ஆணையர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், தேர்தலை திருவிழா போன்று நடத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். தேர்தல் திருவிழாவில் எங்களுடன் சேர்ந்து நீங்களும் பங்கெடுத்துக்கொள்ளுங்கள்.
தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக இதுவரை 800 மாவட்ட ஆட்சியர்களுடன் நேரடியாக பேசியுள்ளேன். ஒட்டுமொத்தமாக 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவிருக்கிறார்கள். இவர்களுக்கு வசதியாக 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவிருக்கின்றன.
மக்களவைத் தேர்தலில் 55 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவிருக்கின்றன. 1.82 கோடி முதன் முறை வாக்காளர்கள் வாக்களிக்கவிருக்கிறார்கள். சுமார் 88.4 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர்.
மொத்த வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி பேர், பெண் வாக்காளர்கள் 47.1 கோடி பேர். இவர்களில் 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் 2.18 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவிருக்கிறார்கள்.
85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் உடலில் 40 சதவீதத்துக்கு மேல் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.