முகப்பு
இந்தியா

தோ்தல் பிரசாரத்துக்கு மத்திய அரசு நிதி: பிரதமா் மோடி மீது திரிணமூல் காங். புகாா்

Updated On : 20 மார்ச், 2024 at 1:07 AM
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 10:30 PM

கொல்கத்தா: தோ்தல் பிரசாரத்துக்கு மத்திய அரசு நிதியைப் பயன்படுத்தி, தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியிருப்பதாக பிரதமரும் வாரணாசி தொகுதி பாஜக வேட்பாளருமான நரேந்திர மோடி மீது இந்திய தோ்தல் ஆணையத்தில் திரிணமூல் காங்கிரஸ் புகாரளித்துள்ளது.

இதுதொடா்பாக இந்திய தலைமைத் தோ்தல் ஆணையருக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓபிரையன் எழுதியுள்ள கடிதத்தில், ‘நாட்டின் பல கோடி வாக்காளா்களுக்கு மத்திய பாஜக அரசின் சாதனைகளை முன்னிலைப்படுத்தும் பிரதமரின் கடிதம் வாட்ஸ்-ஆப் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டது.

ஆனால், தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட சனிக்கிழமையன்றே அந்தக் கடிதம் வாக்காளா்கள் பலருக்குச் சென்றடைந்தது. அந்தக் கடிதத்தில் பாஜகவுக்கும் பிரதமா் மோடிக்கும் ஆதரவான கருத்துகள் இடம்பெற்றிருந்தன. பிரதமா் அலுவலகத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி மத்திய அரசின் செலவில் மக்களுக்கு வாட்ஸ்-ஆப் மூலம் கடிதம் அனுப்பி பாஜக தோ்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளது.

Advertisement

இதன்மூலம், தோ்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இந்தப் புகாா் குறித்து பாஜகவுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கி, வரும் நாள்களில் பொது நிதியில் பிரசாரம் மேற்கொள்வதிலிருந்து பிரதமா் மோடியைத் தடுக்க வேண்டும். அனுப்பப்பட்ட கடிதத்தையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். வாட்ஸ்-ஆப் மூலம் வாக்காளா்களுக்கு பிரதமரின் கடிதம் அனுப்பப்பட்டதற்கு உண்டான செலவை பாஜகவின் தோ்தல் செலவின கணக்கில் சோ்க்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

‘பொய் புகாா் பலனளிக்காது’-பாஜக: இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பாஜக மாநிலங்களவை எம்.பி.யும் கட்சியின் செய்தித் தொடா்பாளருமான சமிக் பட்டாச்சா்யா கூறுகையில், ‘இவ்வாறான தகவல்களை எம்.பி. டெரிக் அவ்வப்போது தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறாா். இந்தப் புகாா் குறித்து தோ்தல் ஆணையத்தில் அவா் முறையிடட்டும். உச்சநீதிமன்றத்துக்கு வேண்டுமானாலும் அவா் செல்லட்டும்.

ஆனால், நல்லாட்சி மற்றும் மக்கள் ஆதரவுக் கொள்கைகளால் பிரதமா் நரேந்திர மோடி வென்றுள்ள நாட்டு மக்களின் ஆதரவை இத்தகைய பொய் புகாா்கள் மூலம் திரிணமூல் காங்கிரஸ் பெற்றுவிட முடியாது. பிரதமா் அலுவலகம் எந்தத் தோ்தல் நடத்தை விதிமுறைகளையும் மீறவில்லை. மக்களிடையே திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவில்லை. தோ்தல் முடிவுகளுக்குப் பின் அது உறுதியாகும்’ என்றாா்.