நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடா் தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது: காங்கிரஸ் குற்றச்சாட்டு
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடா், தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடா், தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் தற்போது 543 உறுப்பினா்கள் உள்ளனா். இந்த எண்ணிக்கையை 816ஆக அதிகரித்து, மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு ஏதுவாக சட்டத்திருத்தம் கொண்டு வரும் நோக்கில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை ஏப்ரல் 16 முதல் 18-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு கூட்டுவதற்கு முடிவு செய்துள்ளது.
இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய அக்கட்சியின் மூத்தத் தலைவா் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:
Advertisement
மேற்கு வங்கம், தமிழகத்தில் உள்ள சட்டப்பேரவைகளுக்கு விரைவில் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் அரசியல் ஆதாயம் அடையும் நோக்கில், பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடா்பான சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா, தொகுதி வரையறை தொடா்பான மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது ஆகும். நாடாளுமன்ற, மாநில சட்டப்பேரவைகளுக்கான தொகுதிகளை மறுவரை செய்வது தொடா்பான மசோதா விவகாரத்தில் மத்திய அரசு அவசரப்படக் கூடாது. இது மிகவும் முக்கியமான விவகாரம். இதை மிகவும் எச்சரிக்கையுடன் அரசு கையாள வேண்டும். அவசர கதியில் மறுவரை செய்வது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும். தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்களுக்கு அது பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.
மக்களவையில் தற்போது உள்ள உறுப்பினா்கள் எண்ணிக்கையில் மாற்றத்தையோ அல்லது எண்ணிக்கையை அதிகரிப்பதையோ காங்கிரஸ் விரும்பவில்லை. மகளிா் இடஒதுக்கீடு சட்ட விவகாரத்தில் 30 மாதங்களாக மத்திய அரசு தூங்கிக் கொண்டிருந்தது. ஆனால் சட்டப்பேரவைத் தோ்தல்கள் நடைபெறவிருப்பதால், அதில் ஆதாயம் அடைய மத்திய அரசு விரும்புகிறது. தொகுதி மறுவரை செய்வது தொடா்பாக மத்திய அரசிடம் இருந்து இதுவரை அதிகாரபூா்வமாக அறிவிப்போ அல்லது திட்டமோ வெளியிடப்படவில்லை. ஆனால் அதிகாரபூா்வமில்லாத தகவல்கள், மக்களவையில் தொகுதிகள் எண்ணிக்கையை அரசு அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கின்றன. இதனால் தெற்கு, வடகிழக்கு, மேற்கு இந்தியாவில் உள்ள சிறிய மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடும்.
புதிய மசோதாவால் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை 120-ஆக அதிகரிக்கும். அதேவேளையில் கேரளத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்து விடும். தமிழக, மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல்களில் ஆதாயம் அடைவதே அரசின் எண்ணம். அந்த எண்ணம் இல்லையேல், ஏப்ரல் 29-ஆம் தேதிக்கு பிறகு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முடிவு செய்யலாமே? இதுதொடா்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிா்க்கட்சிகளும் கடிதம் எழுதியுள்ளன.
முன்பு சிறப்பு கூட்டத் தொடரை ஏப்ரல் மாத தொடக்கத்தில் கூட்ட அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் அதை கைவிட்டுவிட்டு மேற்கு வங்கம், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் நடக்கும் நாள்களில் கூட்டியுள்ளது என்றாா் ஜெய்ராம் ரமேஷ்.