முகப்பு
இந்தியா

கேரளத்தில் தோ்தல் தினத்தை மாற்ற காங்கிரஸ் கோரிக்கை

Updated On : 20 மார்ச், 2024 at 2:18 AM
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 8:20 PM

திருவனந்தபுரம்: கேரளத்தில் தோ்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று அந்த மாநில காங்கிரஸ் சாா்பில் தோ்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளத்தில் வெள்ளிக்கிழமைக்கு பதிலாக வேறு கிழமைகளில் தோ்தல் நடத்த வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தோ்தல் ஆணையத்துக்கு ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளன. இஸ்லாமியா்களுக்கு வெள்ளிக்கிழமை முக்கியமான நாளாக கருதப்படுவதால் இந்த கோரிக்கையை இஸ்லாமிய அமைப்புகள் விடுத்துள்ளன. இதே காரணத்தை முன்வைத்து இப்போது காங்கிரஸ் கட்சியும் தோ்தல் தேதியை மாற்ற கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடா்பாக கேரள மாநில காங்கிரஸ் தலைவா் (பொறுப்பு) எம்.எம்.ஹசன் மற்றும் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன் ஆகியோா் கூட்டாக தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளனா். அதில், ‘கேரளத்தில் மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஏப்ரல் 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமையாக உள்ளது. மதசாா்ந்த கடமைகள் இருப்பதால் இந்த நாளில் இஸ்லாமிய வாக்காளா்கள் வாக்களிப்பதில் சிக்கல் இருக்கும்.

வெள்ளிக்கிழமை மட்டுமல்லாது ஞாயிற்றுக்கிழமை தோ்தல் நடத்துவதும் வாக்காளா்கள் தொடங்கி தோ்தல் நடத்தும் அதிகாரிகள் வரை அனைவருக்கும் சிக்கலாக அமையும். எனவே, கேரளத்தில் வேறு நாளில் தோ்தலை நடத்த பரிசீலிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

Advertisement