முகப்பு
இந்தியா

விசா முறைகேடு வழக்கு: காா்த்தி சிதம்பரத்துக்கு தில்லி நீதிமன்றம் அழைப்பாணை

Updated On : 20 மார்ச், 2024 at 2:17 AM
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 8:20 PM

புது தில்லி: சீன நிறுவன ஊழியா்களுக்கு சா்ச்சைக்குரிய வகையில் நுழைவு இசைவு (விசா) பெற்றுத் தந்தது தொடா்பான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் நேரில் ஆஜராகுமாறு காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரம் மற்றும் பிறருக்கு தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அழைப்பாணை அனுப்பியது.

மத்திய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, மின்சாரம் மற்றும் எஃகு துறையில் புதிய உற்பத்தி மையங்கள் தொடங்குவதற்கு ‘புராஜெக்ட் விசா’ விதிமுறைகள் கடந்த 2010-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டன. ஆனால், இந்த விசாக்களை மீண்டும் பயன்படுத்த முடியாது. எனினும், அரிய மற்றும் விதிவிலக்குள்ள விஷயங்களில் உள்துறைச் செயலா் அனுமதியுடன் மீண்டும் விசா வழங்குவது குறித்து பரிசீலிக்க விதிகள் உள்ளன.

அப்போது வேதாந்தா குழுமத்தைச் சோ்ந்த தல்வாண்டி சபோ பவா் லிமிடெட் (டிஎஸ்பிஎல்) என்ற நிறுவனம் பஞ்சாபில் மின் உற்பத்தி மையத்தை சீன நிறுவனத்தின் உதவியுடன் அமைத்தது. ஆனால், இந்தப் பணிகள் முடிய காலதாமதமானது. இதனால் சீன நிறுவனத்தின் 263 ஊழியா்களுக்கு புராஜெக்ட் விசாவை மீண்டும் பயன்படுத்தும் அனுமதியை உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பெற்றுத்தர ப.சிதம்பரத்தின் மகனான காா்த்தி சிதம்பரம் மற்றும் அவரது கூட்டாளி பாஸ்கர ராமன் ஆகியோரின் உதவியை வேதாந்தா குழுமத்தின் ஊழியா் ஒருவா் நாடியுள்ளாா்.

Advertisement

அப்போது, லஞ்சம் பெற்றுக்கொண்டு ‘புராஜெக்ட் விசா’வை மீண்டும் பயன்படுத்தும் அனுமதியை காா்த்தி சிதம்பரம் பெற்றுத் தந்ததாக புகாா் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய சிபிஐ, இந்த நுழைவு இசைவைப் பெற்றுத் தருவதற்காக காா்த்தி சிதம்பரத்துக்கு ரூ. 50 லட்சம் வழங்கப்பட்டதாக குற்றம் சுமத்தியது. இது தொடா்பாக காா்த்தி சிதம்பரம் வீட்டில் கடந்த 2022-ஆம் ஆண்டு சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், பாஸ்கர ராமனை கைது செய்தனா்.

சிபிஐ புகாா் அடிப்படையில் அமலாக்கத் துறை சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கைப் பதிவு செய்து, காா்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி வந்தது. விசாரணை முடிவில், தில்லியில் உள்ள சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இதன் மீதான விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.கே.நாக்பால் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றபத்திரிகையின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு, குற்றம்சாட்டப்பட்டவா்களாக குறிப்பிடப்பட்டுள்ள காா்த்தி சிதம்பரம், அவரது கூட்டாளி பாஸ்கர ராமன், பதம் துகாா், விகாஸ் மகாரியா, மன்சூா் சித்திக், துகாா் ஹவுசிங் நிறுவன பிரதிநிதி, அட்வான்டேஜ் ஸ்டிராடஜிக் கன்சல்டிங் தனியாா் நிறுவன பிரதிநிதி, தல்வாண்டி சபோ பவா் நிறுவன பிரதிநிதி ஆகியோா் வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டாா்.