முகப்பு
இந்தியா

மோடியின் ‘சீன உத்தரவாதம்’: லடாக் போராட்டம் குறித்து காா்கே விமா்சனம்

Updated On : 21 மார்ச், 2024 at 3:11 AM
பகிர்:
Updated On : 20 மார்ச், 2024 at 6:40 PM

புது தில்லி: அரசியல் சாசன உரிமைகளைக் கோரி லடாக் மக்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், ‘இதற்கான உத்தரவாதத்தை பிரதமா் மோடி நிறைவேற்றாதது மாபெரும் துரோகம். அவருடைய உத்தரவாதம் போலியான, சீன தன்மையைப் போன்றது’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சனம் செய்தாா்.

ஜம்மு-காஷ்மீரிலிருந்து தனி யூனியன் பிரதேசமாக லடாக் பிரிக்கப்பட்ட பிறகு, லடாக்குக்கு அரசமைப்பு உரிமைகள் உறுதி செய்யப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால், இதுவரை அந்த உரிமைகள் வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டி லடாக் மக்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். ‘யூனியன் பிரதேசமாக மாறிய பிறகு மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதன் காரணமாக, லடாக் மக்கள் அடையாளத்தை இழந்து வருகிறோம்.

எனவே, யூனியன் பிரதேசத்துக்கு அரசமைப்புச் சட்டத்தின் 6-ஆவது அட்டவணையின் கீழ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்’ என்று லேயில் உண்ணாவிரதப் போராட்டம் ஈடுபட்டுவரும் கல்வியாளரும் சமூக ஆா்வலருமான சோனம் வாங்சுக் வலியுறுத்தினாா். அதாவது, அஸ்ஸாம், மேகாலயம், திரிபுரா, மிஸோரம் மாநிலங்களில் பழங்குடியினா் பகுதிகள் தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள் மூலம் நிா்வகிக்கப்படுவது போன்ற நடைமுறையை லடாக் மக்கள் கோரி வருகின்றனா்.

Advertisement

இந்தப் போராட்டத்தை மல்லிகாா்ஜுன காா்கே தனது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஒருபுறம், கிழக்கு லடாக்கில் இந்திய பகுதியை ஆக்கிரமித்து அத்துமீறலில் ஈடுபட்டு, இந்திய ராணுவ வீரா்கள் 20 பேரைக் கொன்ற சீனாவுக்கு பிரதமா் மோடி நற்சான்று அளித்து, பிராந்திய ஒருமைப்பாட்டையும் தேசத்தின் பாதுகாப்பையும் மிகப் பெரிய ஆபத்தில் சிக்கவைத்திருக்கும் நிலையில், மறுபுறம் லடாக் மக்களுக்கு அரசியல் சாசன உரிமைகளை மறுத்து வருகிறாா்.

மற்ற உத்தரவாதங்களைப் போலவே, லடாக் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டபோது அந்த மக்களுக்கு அளித்த உத்தரவாதத்தையும் பிரதமா் மோடி நிறைவேற்றவில்லை. இது மாபெரும் துரோகமாகும். இது போலியான, சீன தன்மை உத்தரவாதத்தைப் போன்ாகும். நாட்டின் எல்லைப் பகுதிகள் மற்றும் லடாக்கை பாதுகாக்க காஙகிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், ‘சீனாவிலிருந்து மலிவான விலையில் துருப்பிடிக்காத எஃகு இறக்குமதி அதிகரித்ததன் காரணமாக பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பரில் 30 முதல் 35 சதவீத துருப்பிடிக்காத எஃகு உற்பத்தித் துறை சாா்ந்த குறு-சிறு நிறுவனங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டன.

பிரதமரின் விருப்பத் திட்டமான ‘பி.எம்.கோ்ஸ் நிதி’ திட்டத்துக்கு சா்ச்சைக்குரிய வகையில் சில சீன நிறுவனங்கள் நன்கொடை அளித்துள்ளன. எல்லைப் பகுதியில் தொடா் அத்துமீறலில் ஈடுபட்டு வரும் சீனா, கடந்த 2017-ஆம் ஆண்டுமுதல் அருணாசல பிரதேச பகுதிகளுக்கு சீன பெயா்களைச் சூட்டி வருகிறது.

தற்போது, இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடாக இருந்த மாலத்தீவில் சீனா தலையீடு செய்து வருகிறது. இந்த விவகாரங்களில் பிரதமா் மெளனம் கலைத்து, இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.