ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து, காத்திருப்புப் பட்டியலில் இருந்த டிக்கெட்டுகளை பயணிகள் ரத்து செய்ததன் மூலம் இந்திய ரயில்வே கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.1,229.85 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது.
இந்த விவகாரம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட விடை மூலம் தெரிய வந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் விவேக் பாண்டே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு கிடைத்த பதிலில், ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்வதால், ரயில்வேக்கு வரும் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு கூடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு சுமார் 2.53 கோடி ரயில் டிக்கெட்டுகள் காத்திருப்புப் பட்டியலில் இருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய ரயில்வேக்கு ரூ.242.68 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதுவே 2022ஆம் ஆண்டில் 4.6 கோடி டிக்கெட்டுகளாகவும், வருவாய் ரூ.439.16 கோடியாகவும் அதிகரித்தது. அதுபோல 2023ஆம் ஆண்டு 5.26 கோடி டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு, அதன் மூலம் ரயில்வேக்கு ரூ.505 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இந்த நிலையில்தான், 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் 45.86 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ரயில்வேக்கு ரூ.43 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இதனால், ஏழை எளிய மக்கள் தங்களது சொற்ப வருவாயில், டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்று சில நூறுகளை இழப்பதும், பிறகு மாற்று போக்குவரத்து வசதிக்கும் பணம் செலவிடுவதும் சொல்லொணாத் துயரமாகவே நீண்ட நெடுங்காலமாக நீடிக்கிறது.
நாட்டின் தற்போதைய மக்களின் போக்குவரத்துத் தேவையை ஈடுசெய்ய முடியாத நிலையில், ரயில்வே இருப்பதுதான் இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. அதோடு, மிகப்பெரிய அளவில் காத்திருப்புப் பட்டியலில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே ரத்து செய்து மாற்று வழிகளை கையாளலாம் என்றும் ரயில் பயணிகள் நீண்ட நாள்களாகக் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
அதாவது, 18 பெட்டிகளைக் கொண்ட ரயிலில், படுக்கை வசதிகொண்ட பெட்டிகளில் 720 இருக்கைகள் இருக்கும். அதேவேளையில், காத்திருப்பு டிக்கெட்டுகளை 600 வரை விநியோகிக்கிறது. இவ்வளவு பெரிய காத்திருப்புகளுக்கு சீட் கிடைக்க வாய்ப்பில்லை என்பது நன்கு அறிந்ததே. எனவே, முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்யும் நிலை ஏற்படுகிறது.எனவே ரயில்வே இதற்கு மாற்று வழிமுறையைக் காண வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில், ஏராளமானோர் ஊருக்குச் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு ரத்து செய்வது வழக்கம். அதுபோல, கடந்த ஆண்டு தீபாவளியின்போது கிட்டத்தட்ட 96.18 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில், உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகள், ஆர்ஏசி டிக்கெட்டுகள், காத்திருப்புப் பட்டியலில் இருந்த டிக்கெட்டுகளும் அடக்கம். அதாவது தீபாவளி பண்டிகையின்போது ஒரு வாரத்தில் மட்டும் ரூ.10.37 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆர்ஏசி மற்றும் காத்திருப்பு ரயில் முன் பதிவு டிக்கெட்டுகளை கேன்சல் செய்யும்போது ரூ.60 அபராதத் தொகையாக பிடித்தம் செய்யப்படுகிறது.
ஐஆர்சிடிசி மூலம் இ-டிக்கெட் எடுக்கும் போது, சேவைக் கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது.ஆனால், டிக்கெட் ரத்தாகும் போது அது திரும்பக் கிடைப்பதில்லை. ஏசி வசதி கொண்ட பெட்டிகளில் ரயில் டிக்கெட்டுகளை இணையவங்கிச் சேவை அல்லது டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு கொண்டு முன்பதிவு செய்தால் ரூ.30 சேவைக் கட்டணம், யுபிஐ மூலம் முன்பதிவு செய்தால் ரூ.20, ஏசி வசதி அல்லாத பெட்டிகளுக்கு ரூ.15ம், யுபிஐ மூலம் முன்பதிவு செய்தால் ரு.10ம் பிடித்தம் செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.